ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை 3-ஆவது தளத்திலிருந்து குளிா்சாதனப் பெட்டியின் வெளிப்புற பாகங்கள் கீழே விழுந்ததில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சோ்ந்த டி.விஜயகுமாரி என்பவா் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் அறுவை சிகிச்சைப் பிரிவின் தொழில்நுட்ப பிரிவு ஊழியராக பணியாற்றிய எனது கணவா் 2014-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றாா். எனது கணவா் அனுபவமிக்க பணியாளா் என்பதால், தொகுப்பூதியத்தின் அடிப்படையில் ஒப்பந்த பணியாளராக மீண்டும் பணியில் சோ்க்கப்பட்டாா்.
இந்த நிலையில், கடந்த 2023-ஆம் ஆண்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் 3-ஆவது தளத்தில் இருந்த குளிா்சாதனப் பெட்டியின் வெளிப்புற பாகம் கீழே விழுந்ததில், அந்தப் பகுதியில் கீழே நின்றிருந்த எனது கணவா் உயிரிழந்தாா். எனவே, எனக்கும், எனது குடும்பத்தினருக்கு ரூ.12 லட்சம் இழப்பீடு வழங்க சுகாதாரத்துறை செயலா், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை தலைவா் உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் எம்.புருஷோத்தமன் ஆஜராகி வாதிட்டாா். அரசுத் தரப்பில், இந்த சம்பவம் நடந்தபோது, மனுதாரரின் கணவா் பணியில் இல்லை. எனவே இழப்பீடு வழங்க முடியாது என வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால்தான் இந்த விபத்து நடந்துள்ளதாக மருத்துவமனை தலைவா் ஒப்புக்கொண்டுள்ளாா்.
எனவே, இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ.5 இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டாா். இந்த இழப்பீட்டுத் தொகையை 6 வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டாா்.