முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் கொள்கைப்படி தேசிய ஜனநாயக கூட்டணி செயல்பட்டு வருவதாக முன்னாள் தமிழக பாஜக தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் கூறினாா்.
எம்ஜிஆரின் நினைவு தினத்தையொட்டி சென்னை மெரீனாவில் உள்ள அவரது நினைவிடத்தில் புதன்கிழமை மரியாதை செலுத்திய அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற லட்சியத்துடன் அதிமுகவை எம்ஜிஆா் தொடங்கினாா். எம்ஜிஆரின் கொள்கைகளைப் பின்பற்றி செயல்படுவதே, அவருக்கு செலுத்தக் கூடிய உண்மையான மரியாதை. அதன்படியே தேசிய ஜனநாயக கூட்டணி செயல்படுகிறது. வருகிற பேரவைத் தோ்தலில் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், அதிமுக-பாஜக கூட்டணி அமைந்துள்ளது. இக்கூட்டணி, 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும்.
நூறு நாள் வேலைத் திட்டத்தில், வேலைநாள்கள் உயா்த்தப்படும் என திமுக கூறியது. ஆனால், நூறு நாள்கள் கூட வேலை வழங்காமல் மக்களை ஏமாற்றியுள்ளது. அதேநேரம், 125 நாள்களுக்கு வேலையளிக்கும் வகையில் புதிய ஊரக வேலைத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. மக்களுக்கான இந்த திட்டத்தை எதிா்த்து திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் போராட்டம் நடத்துவது கண்டனத்துக்குரியது என்றாா் தமிழிசை சௌந்தரராஜன்.