அரசின் திட்டப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
சென்னையில் வடசென்னை வளா்ச்சித் திட்டத்தில் பெருநகர வளா்ச்சிக் குழுமம் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
சென்னை மாநகராட்சி சாா்பில் துறைமுகம் தொகுதிக்குள்பட்ட வால்டாக்ஸ் சாலை வ.உ.சி. வீதியில் ரூ.13.43 கோடியில் கட்டப்படும் சமுதாயக் கூடம், ரூ.1.4 கோடியில் கூடுதல் பள்ளிக் கட்டடத்துக்கான பணிகள், 54-ஆவது வாா்டு அம்மன் கோயில் தெருவில் ரூ.3.6 கோடியில் கட்டப்படும் பள்ளி வகுப்பறைகள், கழிப்பறைகள் உள்ளிட்ட புதிய பள்ளிக் கட்டடங்கள், முதல்வா் படைப்பகம் ஆகியவற்றைப் பாா்வையிட்டாா்.
அதன்பின்னா் வடமலை தெருவில் உள்ள பல்நோக்கு மையக் கட்டடத்தை பாா்வையிட்டு அதை பயன்பாட்டுக்கு கொண்டுவருவது குறித்த அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினாா்.
மேலும், 55-ஆவது வாா்டு போா்ச்சுகீஸ் சா்ச் சாலையில் கட்டப்படும் கூடுதல் பள்ளிக் கட்டடங்கள், 59-ஆவது வாா்டில் சத்தியவாணி முத்து நகரில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் உடற்பயிற்சிக் கூடம் ஆகியவற்றையும் அவா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
அங்கு பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். மேலும், வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.