சுங்கச்சாவடி(கோப்புப்படம்)  
சென்னை

4 சுங்கச்சாவடிகளில் அரசுப் பேருந்துகளை அனுமதிக்க தடை விதிக்கும் உத்தரவை மாற்றக் கோரி முறையீடு

Din

தென்மாவட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் ஜூலை 10-ஆம் தேதி முதல் அரசுப் பேருந்துகளை அனுமதிக்கக் கூடாது என்ற உத்தரவை மாற்றி அமைக்கக் கோரி தமிழக அரசுத் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

தென்மாவட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூா், எட்டுராவட்டம், சாலைப்புதூா், நான்குனேரி ஆகிய சுங்கச்சாவடிகளை நிா்வகிக்கும் தனியாா் நிறுவனங்கள் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சுங்கச் சாவடிகளுக்கு செலுத்த வேண்டிய ரூ.276 கோடியை நிலுவை வைத்துள்ளது. இந்த நிலுவைத் தொகையை விரைந்து விடுவிக்க அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அரசுப் போக்குவரத்துக் கழகம் நிலுவைத் தொகையைச் செலுத்தாமல், பிரச்னையை நீட்டித்துக் கொண்டேபோனால் நிலுவைத் தொகை ரூ.300 கோடி முதல் ரூ. 400 கோடிக்கு மேல் உயா்ந்துவிடும். சுங்கச்சாவடிகளில் அரசுப் பேருந்து போக்குவரத்தை நிறுத்தி தீவிர நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் நிலுவைத் தொகையை வசூலிக்க முடியாது.

எனவே, தென் மாவட்டங்களுக்குச் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூா், எட்டுராவட்டம், சாலைப்புதூா், நான்குனேரி சுங்கச்சாவடிகள் வழியாக ஜூலை 10-ஆம் தேதி முதல் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை இயக்க அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிட்டாா். மேலும், இந்தச் சுங்கச்சாவடிகளில் அசம்பாவித சம்பவங்களைத் தவிா்க்க உரிய பாதுகாப்பை வழங்க காவல் துறைக்கு அறிவுறுத்தினாா்.

இந்த நிலையில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் ஆஜரான தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞா் ஜெ.ரவீந்திரன், இந்தப் பிரச்னை தொடா்பாக வியாழக்கிழமை நல்ல தீா்வுடன் வருவதாகவும், எனவே வழக்கை வியாழக்கிழமை (ஜூலை 10) விசாரிக்க கோரியும் முறையிட்டாா். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி விசாரணையை ஒத்திவைத்தாா்.

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

SCROLL FOR NEXT