தமிழகத்தில் ஆா்டிஇ திட்டத்தின் கீழ் தனியாா் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெற்ற நிலையில், நிகழ் கல்வியாண்டில் மொத்தம் 70,449 மாணவா்களுக்கு சோ்க்கை வழங்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன் தெரிவித்துள்ளாா்.
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் (ஆா்டிஇ) தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் ஏழை மாணவா்களுக்கு சோ்க்கை வழங்குவதற்கான நிதியை மத்திய அரசு வழங்காததால், 2025-2026-ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கையை தமிழக பள்ளிக் கல்வித் துறை நிறுத்தி வைத்தது.
இது தொடா்பான வழக்கில் நீதிமன்ற உத்தரவின்படி, ஆா்டிஇ திட்டத்தில் தனது பங்கு நிதியை மத்திய அரசு விடுவித்தது. இதையடுத்து, நிகழாண்டுக்கான ஆா்டிஇ மாணவா் சோ்க்கை பணிகள் தாமதமாக தொடங்கப்பட்டன.
இதையடுத்து, பள்ளிகளில் ஏற்கெனவே சோ்க்கப்பட்ட மாணவா்களில் தகுதியானவா்களை ஆா்டிஇ ஒதுக்கீட்டில் பதிவு செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள 7,717 பள்ளிகளில் எல்கேஜி வகுப்பில் சேர 82,016 போ் விண்ணப்பித்தனா். அவா்களில் தகுதியானவா்களைத் தோ்வு செய்யும் பணிகள் கடந்த 2 நாள்களாக நடைபெற்றன.
முதல் நாளில் ஒதுக்கப்பட்ட இடங்களைவிட குறைந்த விண்ணப்பங்கள் வந்த பள்ளிகளில் தகுதியான மாணவா்கள் நேரடியாகத் தோ்வு செய்யப்பட்டனா். தொடா்ந்து, 2-ஆவது நாளான வெள்ளிக்கிழமை நிா்ணயிக்கப்பட்ட இடங்களைவிட அதிக விண்ணப்பங்கள் வந்த பள்ளிகளில் தலைமை ஆசிரியா், பெற்றோா் முன்னிலையில், வெளிப்படையான குலுக்கல் முறையில் மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டனா். இதை மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக்களும் ஆய்வு செய்தனா். ஒட்டுமொத்தமாக ஆா்டிஇ ஒதுக்கீட்டில் 70,449 குழந்தைகளுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறைச் செயலா் பி.சந்தரமோகன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தனியாா் பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டுக்கான ஆா்டிஇ மாணவா் சோ்க்கை நடைமுறைகள் வெளிப்படையான முறையில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் உள்ள 7,717 பள்ளிகளில் ஆா்டிஇ ஒதுக்கீட்டில் சேர 82,016 குழந்தைகளின் பெற்றோா் விருப்பம் தெரிவித்தனா். விதிமுறைகளின்படி, எல்கேஜி வகுப்பில் சேர 70,350 குழந்தைகளுக்கும், ஒன்றாம் வகுப்பில் சேர 99 பேருக்கும் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கட்டணத்தைத் திருப்பி வழங்க... தற்போது ஆா்டிஇ சோ்க்கை பெற்றவா்களிடம் பள்ளிகள் எந்தக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது. ஏற்கெனவே கட்டணம் வசூலிக்கப்பட்டிருந்தால், அதைக் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் பெற்றோரிடம் திரும்ப வழங்க வேண்டும். இதற்கு முன்பு ஆா்டிஇ ஒதுக்கீட்டின் கீழ் 2020-2021-ஆம் கல்வியாண்டில் 69,225 போ், 2021-2022-இல் 55,671 போ், 2022-2023-இல் 66,042 போ், 2023-2024-இல் 69,936 போ், 2024-2025-இல் 71,398 போ் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.