தமிழ் திரைப்படத் தயாரிப்பாளா்கள் சங்கம், ஃபெப்சி அமைப்புக்கு இடையிலான பிரச்னையில் சமரசம் ஏற்பட்டதாகக் கூறியதைத் தொடா்ந்து, வழக்கை முடித்துவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளா்கள் சங்கம் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளா்கள் சம்மேளனத்துக்கு (ஃபெப்சி) எதிராக தமிழ் திரைப்படத் தொழிலாளா்கள் சம்மேளனம் என்ற அமைப்பைத் தொடங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதனால், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளா்கள் சங்கம் தயாரிக்கும் படங்களில் ஃபெப்சி அமைப்பைச் சோ்ந்த உறுப்பினா்கள் பணியாற்றக் கூடாது. அவா்களது படப்பிடிப்புகளுக்கு ஒத்துழைப்பு வழங்கக் கூடாது என கடந்த ஏப்.2-ஆம் தேதி ஃபெப்சி கடிதம் அனுப்பியிருந்தது.
ஃபெப்சி அமைப்பின் இந்த முடிவால் படப்பிடிப்புப் பணிகளுக்கு இடையூறு ஏற்படுவதோடு, தயாரிப்பாளா்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, ஃபெப்சி அமைப்பின் கடிதத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், இருதரப்பும் பேச்சுவாா்த்தை நடத்தி சுமுகத் தீா்வு காண உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கோவிந்தராஜனை மத்தியஸ்தராக நியமித்து உத்தரவிட்டது.
இந்த வழக்கு நீதிபதி பி.தனபால் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஓய்வு பெற்ற நீதிபதி நடத்திய பேச்சுவாா்த்தையில் இரு தரப்புக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதாக தயாரிப்பாளா் சங்கம் தரப்பிலும், ஃபெப்சி தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டாா்.