FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இருங்காட்டுக்கோட்டை- ஒரகடம் சிப்காட்களில்பயன்பாட்டுக்கு வராத கனரக ஊர்தி முனையங்கள்...!

காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக்கோட்டை மற்றும் ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்கா வளாகங்களில் ரூ. 22 கோடி மதிப்பீட்டில்

29 ஜனவரி 2024, 11:47 pm IST
இருங்காட்டுக்கோட்டை சிப்காட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கனரக ஊர்திகள் நிறுத்தும் முனையம்.
பகிர்:

காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக்கோட்டை மற்றும் ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்கா வளாகங்களில் ரூ. 22 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட கனரக ஊர்திகள் நிறுத்தும் முனையங்கள் திறக்கப்பட்டு 9 மாதங்களாகியும் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை.
இதனால் சிப்காட் தொழிற்பூங்காக்களுக்கு மூலப் பொருள்களை ஏற்றி வரும் கனரக வாகனங்கள் சாலையிலேயே நிறுத்தப்படுகின்றன.
இதனால் போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்படுவதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமப்படுகின்றனர். 
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த இருங்காட்டுக்கோட்டை சிப்காட் பகுதியில் ஹூண்டாய் கார் தொழிற் சாலையும், அதற்கு உதிரி பாகங்கள் உற்பத்தி செய்தளிக்கும் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகளும் உள்ளன. 
இதே போன்று ஒரகடம் பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்பட்டு ரெனால்ட்-நிஸான் கார் தொழிற்சாலை, டைம்லர், கோமாட்சு ஆகிய கனரக வாகனங்கள் உற்பத்தி செய்யும் தொழிற் சாலைகள், இருசக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யும் என்பீல்டு மற்றும் யமஹா நிறுவனங்கள், டயர்கள் உற்பத்தி செய்யும் அப்போலோ நிறுவனம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. 
இந்நிலையில் இருங்காட்டுக்கோட்டை மற்றும் ஒரகடம் சிப்காட் பகுதிகளில் உள்ள தொழிற் சாலைகளுக்கு நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மூலப்பொருள்கள், உதிரிபாகங்கள் கன்டெய்னர் லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகின்றன. 
இதேபோன்று இப் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் கார்கள், லாரிகள், வேன்கள், டயர்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் வெளி மாநிலங்களுக்கு கன்டெய்னர் லாரிகளில் எடுத்துச் செல்லப்படுகின்றன. 
இருங்காட்டுக்கோட்டை, ஒரகடம் தொழிற்சாலைகளுக்கு வரும் கன்டெய்னர் லாரிகள் பொருள்களை ஏற்றவும், இறக்கவும் குறைந்தது 10 நாள்கள் முதல் மாதக்கணக்கில் சிப்காட் பகுதி சாலையோரங்களில் நிறுத்தப்படுகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு விபத்துகளும் உருவாகின்றன.
இந்நிலையில், இருங்காட்டுக்கோட்டை மற்றும் ஒரகடம் பகுதிகளுக்கு வெளி மாநிலங்களில் இருந்து வரும் கன்டெய்னர் லாரிகளை நிறுத்த இரண்டு சிப்காட் பகுதிகளிலும் தலா ரூ. 10.98 கோடி மதிப்பீட்டில் கனரக ஊர்திகள் நிறுத்தும் முனையங்கள் அமைக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கியது. 
இப்பணி முடிவடைந்ததை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் இந்த கனரக ஊர்திகள் நிறுத்தும் முனையங்களை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தார். 
இந்த கனரக ஊர்திகள் நிறுத்தும் முனையங்களில் லாரிகளின் ஓட்டுநர்களுக்கு தங்கும் விடுதி, உணவகம், கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 
இங்கு கனரக ஊர்திகள் நிறுத்தும் முனையங்கள் திறக்கப்பட்டதோடு சரி, கடந்த 9 மாதங்களாக பயன்பாட்டுக்கு வரவில்லை. நூற்றுக்கணக்கான கன்டெய்னர் லாரிகள் சிப்காட் சாலைகள் மற்றும் நெடுஞ்சாலையோரங்களிலேயே நிறுத்தப்படுகின்றன. 
இந்த வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை தடுக்க கனரக ஊர்திகள் நிறுத்தும் முனையங்களை தாமதமின்றி பயன்பாட்டுக்கு கொண்டு வர அரசும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 


சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கன்டெய்னர் லாரிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments