குன்றத்தூர் ஒன்றிய கிராமங்களில் கென்யா நாட்டுக் குழுவினர் ஆய்வு
கரசங்கால் மற்றும் மலைப்பட்டு ஆகிய கிராமங்களில் ஊரக வளர்ச்சித் துறை சார்பாக நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை ஆப்பிரிக்க நாடான கென்யாவைச் சேர்ந்த
கரசங்கால் மற்றும் மலைப்பட்டு ஆகிய கிராமங்களில் ஊரக வளர்ச்சித் துறை சார்பாக நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை ஆப்பிரிக்க நாடான கென்யாவைச் சேர்ந்த குழுவினர் திங்கள்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தமிழகத்தில் ஊரக வளர்ச்சித் துறை சார்பாக நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள், முழு சுகாதாரத் திட்டப் பணிகள் ஆகியவற்றையும், அரசுப் பள்ளிகள், மகளிர் சுகாதார வளாகங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதையும் பார்வையிட கென்யா நாட்டை சேர்ந்த (கவுண்டி) கவர்னர்கள், உலக வங்கி உறுப்பினர்கள், துணை ஆட்சியர்கள், சுகாதாரம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையை சேர்ந்த அதிகாரிகள் என மொத்தம் 18 பேர் தமிழகம் வந்துள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ள இந்தக் குழுவினர் முதல் கட்டமாக, காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம் கரசங்கால் கிராமத்தில் ஊரக வளர்ச்சித் துறை சார்பாக பராமரிக்கப்பட்டு வரும் நாற்றங்கால் பண்ணை, பழமரக்கன்றுகள் பண்ணைத் தோட்டம், நாற்றங்கால் உற்பத்தி செய்யும் இடம், மண்புழு உர உற்பத்திக் கூடம், திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் நடைபெற்று வரும் குப்பைகளைத் தரம் பிரிக்கும் களம் ஆகியவற்றை திங்கள்கிழமை பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.
இதையடுத்து, மலைப்பட்டு கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளி, மகளிர் சுகாதார வளாகம், அங்கன்வாடி மையம், தனிநபர் இல்லக் கழிப்பறைகள் ஆகியவற்றைப் பார்வையிட்டு ஆய்வு நடத்திய கென்யா குழுவினர், மலைப்பட்டு பகுதி மக்களிடம் கலந்துரையாடினர். அப்போது, மாவட்டத் திட்ட இயக்குநர் ஜெயகுமார், ஊரக வளர்ச்சித் துறை சார்பாக நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் சுகாதாரத் திட்டங்கள் குறித்து கென்யா குழுவினருக்கு விளக்கிக் கூறினார். இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரபாபு, பாஸ்கரன், ஒன்றியப் பொறியாளர் வசுமதி, மலைப்பட்டு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.