முகப்பு
காஞ்சிபுரம்

ஆட்டோ ஓட்டுநரை ரூ.2,100-க்காக கொலை செய்தவர் கைது

ஆட்டோ ஒட்டுநர் ஒருவர் தன்னிடம் 2,100 ரூபாயை வாங்கி திருப்பித் தராததால், அவரைக் கொலை செய்த நண்பரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On : 23 அக்டோபர், 2018 at 3:17 AM
பகிர்:


ஆட்டோ ஒட்டுநர் ஒருவர் தன்னிடம் 2,100 ரூபாயை வாங்கி திருப்பித் தராததால், அவரைக் கொலை செய்த நண்பரை போலீஸார் கைது செய்தனர்.
மாமல்லபுரம் அருகில் கிழக்கு கிழக்கு கடற்கரைச் சாலை சூளேரிக்காட்டுக்குப்பம் கடற்கரைப் பகுதியில் கடந்த 14ஆம் தேதியன்று முகம் சிதைக்கப்பட்ட நிலையில் ஒருவர் கொலையுண்டு கிடந்தார். தகவலறிந்த போலீஸார் அப்பகுதிக்கு வந்து, அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தக் கொலை தொடர்பாக மாமல்லபுரம் காவல் ஆய்வாளர் ரவிக்குமார் வழக்குப் பதிவு செய்து, கொலையுண்டவர் யார்? எந்த ஊர்? எனத் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தார். 
இதனிடையே, சென்னை பல்லாவரம் கன்டோன்மெண்ட் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகன் வடிவேல் அண்மையில் காணாமல் போனார். அவர் ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். அவர் காணாமல் போனது தொடர்பாக போலீஸாரிடம் அவரது குடும்பத்தார் புகார் அளித்திருந்தனர். எனவே, கடற்கரைப் பகுதியில் இறந்து கிடந்தவரின் சடலத்தைப் பார்த்து அடையாளம் காட்ட, வடிவேலின் உறவினர்களை போலீஸார் அழைத்து வந்து காட்டினர். இதில் இறந்தது வடிவேல்தான் என்பது உறுதிசெய்யப்பட்டது. அவர் தனது குழந்தைகளுக்கு நடத்தவிருந்த காதணி விழாவிற்கு கோவளம் முட்டுக்காட்டில் உள்ள தனது மூத்த சகோதரி வீட்டிற்கு அண்மையில் சென்றதும் அதன் பிறகு காணாமல் போனதும் போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது. 
இதையடுத்து, வடிவேலின் நண்பரும் மற்றொரு ஆட்டோ ஓட்டுநருமான ராஜுவைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் கூறிய விவரங்கள் வருமாறு:
வடிவேலு, அவரது அண்ணன் மகன் சரத்குமார், அவரது நண்பர்கள் ரமேஷ், முஸ்தபா, ராஜு ஆகியோர் கடந்த 14 ஆம் தேதியன்று மாமல்லபுரத்தை அடுத்த கோவளத்தில் மது அருந்தினர். அப்போது அந்த இடத்துக்கு வடிவேலின் உறவினர் மணி என்பவர் மொபெட்டில் வந்துள்ளார். அனைவரும் ஒன்றுசேர்ந்து மது அருந்தினர். 
இதற்கிடையில் வடிவேல், ராஜுவிடம் ரூ.2100 ரூபாயை கடன் வாங்கிவிட்டு தரவில்லை என குடிபோதையில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. பின்னர் ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது போதையில் ரமேஷ் கீழே விழுந்தார். அவரை முஸ்தபாவும், மணியும் கீழே இறக்கினர். அப்போது ராஜு ஆட்டோவை எடுத்து வந்து விட்டார். ரமேஷ், மணி, முஸ்தபா ஆகியோர் மணியின் மொபெட்டில் வீட்டுக்குச் சென்று விட்டனர். 
ஆட்டோவில் வடிவேலும், ராஜுவும் இருந்தனர்.தனக்குத் தரவேண்டிய பணத்தை ராஜு கேட்டார். தர முடியாது என வடிவேல் கூறியதால், கொலை செய்து விடுவதாக ராஜு மிரட்டினார். அதற்கு முன் நான் உன்னைக் கொலை செய்து விடுவேன் என்று வடிவேல் கூறினார். குடிபோதையில் ஆத்திரம் தலைக்கேறிய ராஜு ஓங்கி அடித்ததில் வடிவேல் மயங்கி விழுந்தார். என்ன செய்வதென்று தெரியாமல் அவரது முகத்தில் கல்லைப் போட்டு நசுக்கிக் கொன்றதாக ராஜு ஒப்புக் கொண்டார். 
இதையடுத்து ராஜுவை காவல் ஆய்வாளர் ரவிக்குமார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.