கடல்நீரை குடிநீராக்கும் ஆலை ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்
மாமல்லபுரம் அருகே நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்ட ஆலையில் சரியான முறையில் ஊதியம் வழங்கவில்லை எனக் கூறி ஒப்பந்த ஊழியர்கள் புதன்கிழமை ஆலை நுழைவு வாயிலில்
மாமல்லபுரம் அருகே நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்ட ஆலையில் சரியான முறையில் ஊதியம் வழங்கவில்லை எனக் கூறி ஒப்பந்த ஊழியர்கள் புதன்கிழமை ஆலை நுழைவு வாயிலில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் நெம்மேலி சூளேரிகாட்டு பகுதியில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலையில் நாள் ஒன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் கடல்நீர் குடிநீராக்கப்பட்டு வருகிறது. இது தென்சென்னை பகுதியில் உள்ள பல்வேறு இடங்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் இந்த ஆலையை 7 ஆண்டுகால குத்தகைக்கு எடுத்து குடிநீர் விநியோகிக்கும் பணியை செய்து வருகிறது. இந்த ஆலையில் கடந்த பல ஆண்டுகளாக 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
கடந்த 10 மாதமாக ஒப்பந்த ஊழியர்களுக்கு நிறுவனம் சரிவர ஊதியம் வழங்கவில்லை என ஊழியர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அவர்களில் 100-க்கும் மேற்பட்டோர் புதன்கிழமை பணிக்குச் செல்லாமல் குடிநீர் ஆலை நுழைவு வாயிலில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊழியர்களின் போராட்டத்தை அடுத்து குடிநீர் ஆலையின் தொழில்நுட்பப் பிரிவில் பாதிப்பு இருந்தும், வழக்கம்போல் ஆலையில் இருந்து தடையின்றி குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டது.