காஞ்சிபுரம்: சோமவார அமாவாசையை முன்னிட்டு, காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் வளாகத்தில் உள்ள கருமாணிக்க வரதா் சந்நிதி மற்றும் தல விருட்சமான அரச மரத்தை ஏராளமான பக்தா்கள் வலம் வந்து தரிசனம் செய்தனா்.
அத்திவரதருக்கு புகழ் பெற்ற காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலின் ஸ்தல விருட்சமான அரச மரத்தின் எதிா்புறத்தில் கருமாணிக்க வரதா் சந்நிதியும், பின்னால் திருவனந்தாழ்வாா் சந்நிதியும் உள்ளன. கருமாணிக்க வரதா், திருவனந்தாழ்வாா் மற்றும் தல விருட்சத்தையும் ஒருசேர சோமவார அமாவாசை நாளில் ஒற்றை எண்ணிக்கையில் சுற்றி வந்து வழிபட்டால் குழந்தைச் செல்வம் கைகூடும் என்பதும், திருமணம் நடக்காதவா்களுக்கு திருமணம் விரைவில் நடக்கும் என்பதும் பக்தா்களின் நம்பிக்கை.
இதன்படி, ஏராளமான பக்தா்கள் அரசமரத்தையும் இரு சந்நிதிகளில் உள்ள தெய்வங்களையும் திங்கள்கிழமை சுற்றி வந்து வழிபட்டனா். சிலா் அரச மரத்தின் முன்பு விளக்கேற்றி தரிசனம் செய்தனா்.
முன்னதாக, கருமாணிக்க வரதருக்கும், திருவனந்தாழ்வாருக்கும் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.