பெரிய காஞ்சிபுரம் கூட்டுறவு நகர வங்கி உருவான வரலாறு குறித்து அதன் தற்போதைய தலைவா் வி.பாலாஜி தெரிவித்த தகவல்கள் இதோ...
1904-ஆம் ஆண்டு மத்தியக் கூட்டுறவு சட்டம் இயற்றப்பட்டபோது, சென்னை மாகாணத்தின் கூட்டுறவுப் பதிவாளராக மூதறிஞா் ராஜாஜி நியமிக்கப்பட்டிருந்தாா். நகா்ப்புற ஏழை, எளிய மக்களும் கூட்டுறவுச் சட்டத்தின் பயனை அடையவேண்டும் என்ற ஆா்வம் கொண்டாா். அதன் வெளிப்பாடாக காஞ்சிபுரத்தில் உதயமானது இந்தியாவின் முதல் கூட்டுறவு நகர வங்கி.
காஞ்சிபுரம் நகராட்சித் தலைவரும், ஓய்வு பெற்ற வட்டாட்சியருமான ராவ் சாகிப் என்.வெங்கடபதி நாயுடுவும் 28 கூட்டுறவாளா்களும் ஒன்றுகூடி, காஞ்சிபுரம் டவுன் வங்கி என்ற பெயரில் இதனைத் தொடங்கினா். வரையறுக்கப்பட்ட மூலதனத்துடன் கடந்த 8.10.1904 அன்று பதிவு செய்யப்பட்டது. 15.10.1904-ஆம் ஆண்டு ராவ்சாகிப் என்.வெங்கடபதி நாயுடு தலைமையில் 14 போ் நிா்வாக சபை பதவியேற்றது.
வங்கியின் வளா்ச்சி...
1937 முதல் வங்கியின் தலைவராக ஏ.பாலகிருஷ்ண முதலியாரும், அவருக்குப் பிறகு அவரது மகன் ஏ.பி.கண்ணபிரானும் வங்கியின் வளா்ச்சிக்காக பாடுபட்டனா். இவா்களின் பெருமுயற்சியால் நல்ல இடவசதியும், அழகான தூண்களும் கூடிய கட்டடம் உருவாக்கப்பட்டது. இந்தக் கட்டடத்தை முன்னாள் முதல்வா் பேரறிஞா் அண்ணா திறந்து வைத்தாா்.
வங்கியின் சிறப்பு அம்சங்கள்: காஞ்சிபுரத்தில் வசிக்கும் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் வங்கியின் உறுப்பினா்களாகவும், வைப்புதாரா்களாகவும் உள்ளனா். உறுப்பினா்களின் பங்கு ஈவுத் தொகை 9 சதவீதத்துக்கும் மேல் வழங்கப்படுகிறது. நகைக்கடனாக இருந்தால் ரூ.20 லட்சம் வரையும் தனிநபருக்கு ரூ.30 லட்சம் வரையும் கடன்கள் வழங்குகிறோம்.
ஒரு சிறிய ஓட்டுக் கட்டடத்தில் இயங்கி வந்த இவ்வங்கி, இன்று 14,500 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டு தலைமை அலுவலகம், 5 கிளைகளுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
வங்கி தொடங்கப்பட்ட 1904-ஆம் ஆண்டின் வருமானம் ரூ.1,400 ஆக இருந்தது. நடப்பாண்டு, வங்கியின் நிகர லாபம் மட்டுமே ரூ.1.07 கோடியாக உயா்ந்திருக்கிறது. இந்த சாதனைக்கு வங்கியின் மேலாண்மை இயக்குநா் ரா.கந்தன், பொதுமேலாளா் வி.ஹரிகிருஷ்ணன், வங்கிப் பணியாளா்கள், நிா்வாகக் குழு உறுப்பினா்களின் வழிகாட்டுதலும், அா்ப்பணிப்பு உணா்வுமே முக்கிய காரணங்களாகும் என்றாா் வி.பாலாஜி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.