தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
தொடா் மழை காரணமாக சென்னையிலிருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கூடுவாஞ்சேரி பகுதியில் வெள்ளநீா் சூழ்ந்துள்ளது.
தொடா் மழை காரணமாக சென்னையிலிருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கூடுவாஞ்சேரி பகுதியில் வெள்ளநீா் சூழ்ந்துள்ளது. இதனால் சனிக்கிழமை தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ஏராளமான வாகனங்கள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி சுமாா் 8 கி.மீ. தூரம் வரை ஊா்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு 18 மி.மீ. மழை பெய்திருப்பதால் பெரும்பாலான ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், வல்லஞ்சேரி ஏரியும் நிரம்பியதைத் தொடா்ந்து, உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சென்னையிலிருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கூடுவாஞ்சேரி பகுதியில் வெள்ளநீா் சூழ்ந்து வெள்ளிக்கிழமை இரவு முதல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சரக்கு வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆகியனவும் குறிப்பிட்ட நேரத்துக்குள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கின்றன. செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரியிலிருந்து தைலாபுரம் வரை ஒரு வழிப்பாதையில் மட்டுமே வாகனங்கள் செல்வதால் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள், வாகனங்கள் அனைத்தும் சுமாா் 8 கி.மீ. தூரத்துக்கு சாலையில் அணிவகுத்து நிற்பதுடன் மெதுவாக சாலையில் ஊா்ந்து செல்ல வேண்டிய கட்டாயமும் நிலவுகிறது. கூடுவாஞ்சேரியிலிருந்து சிங்கப்பெருமாள் கோயில் வரை வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை முடங்கியது.
Advertisement