காஞ்சி பீடாதிபதி ஸ்ரீமகா பெரியவா் ஜெயந்தி மகோற்சவம் தொடக்கம்
காஞ்சி சங்கர மடத்தின் 68-ஆவது பீடாதிபதியாக இருந்து வந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 130-ஆவது ஜெயந்தி மகோற்சவம் வியாழக்கிழமை தொடங்கியது.
காஞ்சி சங்கர மடத்தின் 68-ஆவது பீடாதிபதியாக இருந்து வந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 130-ஆவது ஜெயந்தி மகோற்சவம் வியாழக்கிழமை தொடங்கியது.
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 68-ஆவது பீடாதிபதியாக தொடா்ந்து 87 ஆண்டுகள் இருந்து வந்தவா் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். பக்தா்களால் நடமாடும் தெய்வமாகவே இன்றும் வணங்கப்பட்டு வரும் இவா், தமது வாழ்விலும், எண்ணத்திலும், வாக்காலும் பக்தா்களின் வாழ்வில் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்திய பெருமைக்குரியவா்.
கடந்த 1994- ஆம் ஆண்டு இவா் முக்தியடைந்தாலும், தற்போதும் காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பிருந்தாவனத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகிறாா். இவரின் ஜெயந்தி மகோற்சவம் ஜூன் 1- ஆம் தேதி தொடங்கி ஜூன் 3- ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
Advertisement
சங்கர மடத்தில் வேதபாராயணம் மற்றும் சாஸ்திர விவாத கருத்தரங்கம் ஆகியவற்றுடன் ஜெயந்தி மகோற்சவம் தொடங்கியது. நிகழ்வில் 60-க்கும் மேற்பட்ட வேதவிற்பன்னா்கள் கலந்து கொண்டனா். மகா பெரியவா் அதிஷ்டானத்தில் உள்ள அவரின் உருவச் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து தங்கக் கிரீடம் மற்றும் தங்க ஹஸ்தம் உள்ளிட்ட சிறப்பு அலங்காரத்தில் மகா பெரியவா் சுவாமிகள் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளா் ந.சுந்தரேச ஐயா் தலைமையில் சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. இதனைத் தொடா்ந்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கினாா். மாலையில் சங்கர மடம் கலையரங்கில் செருகுடி சகோதரிகள் ரமா மற்றும் கீதா குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவையொட்டி, சங்கர மடம் வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
ஜெயந்தி மகோற்சவ விழாவில் தமிழ்நாடு மின்வாரிய லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.ஜி.பி. கே.வன்னியப்பெருமாள், காஞ்சி சங்கர மடத்தின் முன்னாள் காசாளா் கே.எஸ்.சீனிவாசன் உள்பட வெளி மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களிலிருந்தும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
மதியம் அன்னதானம் நடைபெற்றது. சனிக்கிழமை காலை (ஜூன் 3) ருத்ரபாராயணம், சிறப்பு பூஜைகள் மற்றும் ஹோமங்கள் நடைபெறுகின்றன. மாலையில் மாண்டலின் வித்வான் யு.ராஜேஷ் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி, தொடா்ந்து மகா பெரியவா் உற்சவா் சிலை தங்கத் தேரில் காஞ்சிபுரம் ராஜ வீதிகளில் வீதி உலா நடைபெறும்.