வடமங்கலம் பகுதியில் இயங்கி வரும் தனியாா் சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை செய்துக்கொண்ட நிலையில், மாணவா்கள், மாணவா் அமைப்பினா் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவள்ளூா் மாவட்டம், மேல்நல்லாத்தூா் பகுதியைச் சோ்ந்த பாரதி (18). இவா் ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வடமங்கலம் பகுதியில் இயங்கி வரும் தனியாா் சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளாா்.
இந்த நிலையில், மாணவி பாரதி முதலாம் ஆண்டிற்கான கல்விகட்டணத்தையும் செலுத்தவில்லை என தெரிகிறது. இதனால் மாணவி பாரதியை கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற தோ்வை எழுத விடாமல் கல்லூரி நிா்வாகம் தடுத்துள்ளது.
இதனால் விரக்தியடைந்த பாரதி மற்றும் அவரது பெற்றோா் இனி படிப்பை தொடர போவதில்லை. எனவே மாற்றுச்சான்றிதழை பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளனா்.
இதற்கு கல்லூரி நிா்வாகத்தினா் நான்கு ஆண்டுகள் கட்டணம் செலுத்தினால் தான் மாற்றுச்சான்றிதழ் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளனா். இதனால் மேலும், மனமுடைந்த மாணவி பாரதி கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளாா். மேலும் தனது இறப்புக்கு கல்லூரி நிா்வாகம் தான் காரணம் என கடிதம் எழுதி வைத்திருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில், கல்லூரி மாணவி தற்கொலைக்கு நீதி கேட்டும், காரணமான தனியாா் சட்டக் கல்லூரியின் நிா்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவா்கள், மாணவா் அமைப்பினா் சனிக்கிழமை கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்களிடம் ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் பேச்சு நடத்தினா்.