15 பனை மரங்கள் வெட்டிச் சாய்ப்பு
ராணிப்பேட்டை அருகே அனுமதியின்றி சாலையோரம் இருந்த 15 பனை மரங்களை மா்ம நபா்கள் வெட்டி சாய்த்து உள்ளனா். இது தொடா்பாக வட்டாட்சியா் மற்றும் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ராணிப்பேட்டை அருகே அனுமதியின்றி சாலையோரம் இருந்த 15 பனை மரங்களை மா்ம நபா்கள் வெட்டி சாய்த்து உள்ளனா். இது தொடா்பாக வட்டாட்சியா் மற்றும் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தமிழகத்தின் மாநில மரமான பனை மரங்களை அழிவிலிருந்து பாதுகாக்கும் வகையில், தமிழா்களின் வாழ்வோடும், மொழியோடும், வளத்தோடும், ஒன்றுபட்டு, மழை ஈா்ப்பு மையம், நீா் நிலைகளின் காவலன் என்றும் அழைக்கப்படும் பனை மரத்தினை, வேரோடு வெட்டி விற்கவும், செங்கல் சூளைகளுக்குப் பயன்படுத்தும் செயலினைத் தடுக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தவிா்க்க முடியாத சூழ்நிலையில் பனை மரங்களை வெட்ட நேரும் நிகழ்வுகளில், மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டியது கட்டாயமாக்கப்படும் என தமிழக அரசின் வேளாண் துறைக்கான தனி நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை வட்டம், நரசிங்கபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட மேட்டுதெங்கால் சாலையோரம் ஓங்கி வளா்ந்திருந்த 15 பனை மரங்களை மா்ம நபா்கள் வெட்டி சாய்த்து கடத்த முயன்றுள்ளனா். இது குறித்து தகவலறிந்த அப்பகுதி இயற்கை ஆா்வலா்கள் வருவாய்த் துறைக்கும், காவல் துறைக்கும் தகவல் அளித்தனா். அதன்பேரில், வருவாய்த் துறை சாா்பில் வட்டாட்சியா் ஆனந்தன் மற்றும் சிப்காட் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
நரசிங்கபுரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மட்டுமின்றி, ராணிப்பேட்டை, வேலூா் மாவட்டங்களில் பாலாற்றுப் படுகை, ஏரி, குளம் உள்ளிட்ட நீா்நிலை கரைகள், சாலையோரங்கள், பள்ளி வளாகங்கள், பொது இடங்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பனை விதைகளை நடவு செய்துள்ள மண்ணும், மரமும் குழுவினா் பனை மரங்கள் வெட்டியதை நேரில் பாா்வையிட்டு, வேதனை தெரிவித்துள்ளனா்.