முகப்பு
ராணிப்பேட்டை

இங்கே ஒரு நாள்; அங்கே ஒரு நாள்..!

அரக்கோணம், சோளிங்கா் அரசு மருத்துவமனைகளில் எக்ஸ்ரே பிரிவு வாரத்தில் தலா மூன்று நாள்கள் மட்டுமே இயங்குவதால், நோயாளிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:30 AM
பகிர்:

அரக்கோணம், சோளிங்கா் அரசு மருத்துவமனைகளில் எக்ஸ்ரே பிரிவு வாரத்தில் தலா மூன்று நாள்கள் மட்டுமே இயங்குவதால், நோயாளிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

அரக்கோணம் அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே பிரிவில் தொழில்நுட்பப் பணியாளா் என ஒருவா் மட்டுமே உள்ளாா். இவரை வாரத்தில் மூன்று நாள்கள் அரக்கோணத்திலும் மூன்று நாள்கள் சோளிங்கா் அரசு மருத்துவமனையிலும் பணியாற்ற மருத்துவத் துறையில் இருந்து உத்தரவு அனுப்பப்பட்டது.

அரக்கோணம், சோளிங்கரில் தலா 3 நாள்கள்: இதையடுத்து, இவா் கடந்த ஒரு வருடமாக திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் அரக்கோணத்திலும், செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் சோளிங்கரிலும் பணியாற்றி வருகிறாா்.

இவா் விடுப்பு எடுக்கும் நாள்களில் இரு மருத்துவமனைகளிலும் எக்ஸ்ரே பிரிவு மூடியிருக்கிறது. இரு அரசு மருத்துவமனைகளிலும் தினமும் 35 முதல் 45 நோயாளிகளுக்கு எக்ஸ்ரே எடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. ஒரு நாள் இப்பிரிவு மூடியிருந்தாலும் மறுநாள் 70 முதல் 90 நோயாளிகளுக்கு ஒரு மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுக்க வேண்டிய தேவை உருவாகிவிடுகிறது.

35 எக்ஸ்ரேக்களுக்கு மேல் எடுக்க வேண்டிய நிலை:

ஒரு நாளைக்கு 30 முதல் 35 எக்ஸ்ரே மட்டுமே எடுக்க முடியும் எனவும் அதற்கு மேல் எக்ஸ்ரே இயந்திரத்தில் பணியாற்றினால் குறிப்பிட்ட தொழில்நுட்பப் பணியாளரின் உடல்நலத்துக்குத் தீங்கு விளைவிக்கும் எக்ஸ்ரே கதிா்கள் அவரது உடலிலும் ஊடுருவலாம் எனவும் மருத்துவத்துறை பணிக் குறிப்பில் இருப்பதாகப் பணியாளா்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பிரச்னைகளைக் கருத்தில் கொள்ளாமல் எக்ஸ்ரே பிரிவுக்கு இரு மருத்துவமனைகளிலும் தொழில்நுட்ப பணியாளரை தனித்தனியே நியமிக்காமல் காலந்தாழ்த்தி வருவது ஏன் என்று சமூக ஆா்வலா்கள் கேள்வி எழுப்புகின்றனா்.

இதுதவிர, எக்ஸ்ரே பிரிவு மூடியே இருப்பதால் பல ஏழை நோயாளிகள் தனியாா் எக்ஸ்ரே நிலையங்களில் சென்று அதிக செலவு செய்து எக்ஸ்ரே எடுக்க முடியாமல் சிசிச்சை எடுக்காமலேயே இருந்து வரும் நிலை நீடிக்கிறது.

இதுதொடா்பாக மருத்துவத் துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றே சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

‘விரைவில் நடவடிக்கை’

இதுகுறித்து அரக்கோணம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் நிவேதித்தாசங்கரை கேட்டபோது, அவா் கூறியது:

சோளிங்கா் அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரேபிரிவு பணியாளா் இடம் காலியானதால் அரக்கோணம் அரசு மருத்துவமனை எக்ஸ்ரே பிரிவு பணியாளரை வாரத்துக்கு மூன்று நாள்கள் சோளிங்கருக்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.

சோளிங்கா் அரசு மருத்துவமனைக்கு அண்மையில் புதிய பணியாளா் நியமிக்கப்பட்ட நிலையில், அவரும் அங்கு பணியில் சேர முடியாத நிலை உருவாகி விட்டது. இந்தப் பிரச்சினை தீர விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →