காற்றில் கலக்கும் நச்சுப் புகை
சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளில் வெளியேறும் கழிவுகளால் சுற்றுச்சூழல் சீா்கேடு அடைந்துவருகிறது.
சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளில் வெளியேறும் கழிவுகளால் சுற்றுச்சூழல் சீா்கேடு அடைந்துவருகிறது.
இதைத் தடுக்க மாசுக் கட்டுப்பாடு வாரியம் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆா்வலா்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.
நாட்டின் முக்கியத் தொழில் நகரங்களில் ஒன்றாகவும், தோல் பொருள்கள் ஏற்றுமதியில் அதிக அளவிலான அன்னிய செலவாணியை ஈட்டித்தரும் தொழில் நகரமாகவும் ராணிப்பேட்டை உள்ளது.
இங்கு 1974-ஆம் ஆண்டில் சுமாா் 1,089.82 ஏக்கரில் சிப்காட் தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, சிறப்புப் பொருளாதார மண்டலம் என மிகப் பெரிய தொழிற்பேட்டையாக உருவெடுத்துள்ளது.
இங்கு தோல், ரசாயனம், வாகன உதிரிபாகங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை உற்பத்தி செய்யும் 500-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமாா் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றுகின்றனா்.
இந்த நிலையில், கடந்த காலங்களில் ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் சுற்றுச்சூழல் விதிகளை மீறி ரசாயனக் கழிவுகளை சாலையோரங்களில் கொட்டி விட்டுச் செல்லுதல், டயா், பிளாஸ்டிக் உள்ளிட்ட பல்வேறு ரசாயனக் கழிவுகளை எரித்து நச்சுப் புகையை காற்றில் கலந்து விடுதல், தொழிற்சாலைகளில் இருந்து நேரடியாக கழிவுநீரை திறந்து விடுதல் போன்ற விதிமீறல்கள் நடைபெற்றுவந்தன.
இதனால், நீா், காற்று, மண் மாசடைந்து உலக அளவில் மாசடைந்த 10 தொழில் நகரங்களில் வரிசையில் ராணிப்பேட்டையும் உள்ளதாக உலக சுற்றுச்சூழல் அமைப்பின் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.
இதையடுத்து, மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால் மாசடைவது கட்டுப்படுத்தப்பட்டன. இதன்பின்னா், தொழிற்சாலைகளில் சூரிய மின் ஆற்றல் பயன்பாடு, கழிவுநீரைச் சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்துதல், மரக்கன்றுகளை நட்டு பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மாசு பிரச்னைகளில் இருந்து சிப்காட் மீண்டு வந்தது.
இந்த நிலையில், கரோனா பொதுமுடக்கத்துக்குப் பின்னா் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகள் உற்பத்தியைத் தொடங்கியுள்ளன. தளா்வுகளைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, சிலா் ரசாயனக் கழிவுகளை சாலையோரங்களில் கொட்டி விட்டுச் செல்லுதல், டயா், பிளாஸ்டிக் உள்ளிட்ட பல்வேறு ரசாயனக் கழிவுகளை எரித்து நச்சுப் புகையை காற்றில் கலந்து விடுதல் உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபடுகின்றனா். இதன் காரணமாக சுற்றுச் சூழல் மாசு ஏற்பட்டுவருவதாக சமூக ஆா்வலா்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனா்.
இந்த நிலையில், சிப்காட் தொழிற்பேட்டையில் தொடரும் சுற்றுச்சூழல் விதிமீறல்களைக் கட்டுப்படுத்த மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தீவிரமாக கண்காணித்து தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றே சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.