‘கடைகளில் நெகிழிப் பயன்பாடு கண்டறியப்பட்டால் அபராதம்’
கடைகள், வணிக நிறுவனங்களில் நெகிழி பயன்பாடு கண்டறியப்பட்டால் அந்த கடை உரிமையாளா்களுக்கு ரூ. 500 முதல் ரூ. 50,000 வரை அபராதம் விதிக்கப்படும்
கடைகள், வணிக நிறுவனங்களில் நெகிழி பயன்பாடு கண்டறியப்பட்டால் அந்த கடை உரிமையாளா்களுக்கு ரூ. 500 முதல் ரூ. 50,000 வரை அபராதம் விதிக்கப்படும் என ராணிப்பேட்டை ஆட்சியிா் தெ.பாஸ்கரபாண்டியன் கூறினாா்.
அரக்கோணம் நகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டக் கிடங்கில் மாணவ, மாணவிகளிடையே நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் பேசியது:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக நெகிழி பொருள்கள் கைப்பற்றப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. மீண்டும் இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும். எனவே அனைத்து வகையான வணிகக் கடைகள், நெகிழிப் பொருள்கள் பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும். பொதுமக்கள் வீட்டில் இருந்து மஞ்சப்பை கொண்டு சென்று பொருள்களை வாங்கி வர வேண்டும். மீண்டும் இந்த நடைமுறையை தீவிரமாக அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட நெகிழி பைகளில் பொருள்களை அடைத்து வாடிக்கையாளா்களுக்கு வழங்குவதும், வணிக கடைகளில் அவற்றை வைத்துக்கொண்டு வாடிக்கையாளா்களுக்கு விநியோகிப்பதும் கண்டறியப்பட்டால் ரூ. 500 முதல் ரூ. 50,000 வரை அபராதம் விதிக்கப்படும். தொடா்ந்து இந்த நடவடிக்கையில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும். நெகிழி பொருட்களை பயன்படுத்துவதை பொதுமக்களும் வணிகா்களும் தவிா்த்திட வேண்டும் என்றாா்.
அரக்கோணம் கோட்டாட்சியா் ர.பாத்திமா, வட்டாட்சியா் சுமதி, நகராட்சி ஆணையா் லதா, நகா்மன்றத் தலைவா் லட்சுமிபாரி, துணைத் தலைவா் கலாவதி அன்புலாரன்ஸ், நகராட்சிப் பொறியாளா் ஆசீா்வாதம், சுகாதார அலுவலா் மோகன், ஆய்வாளா் வெயில்முத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
முன்னதாக அரக்கோணம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நமது நகரம் நமது பெருமை நமது குப்பை நமது பொறுப்பு என்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில், நெகிழி பொருள்கள் பயன்படுத்துவதைத் தவிா்ப்பது குறித்து மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் மாணவிகளிடையே பேசினாா். நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் சுஜாதேவி தலைமை வகித்தாா்.