கல்குவாரி குட்டையில் மூழ்கி மாற்றுத் திறனாளி பலி
வாணியம்பாடி அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி மாற்றுத் திறனாளி இறந்தாா். அவரது சடலத்தை 26 மணிநேரம் போராடி தேசிய பேரிடா் மீட்புப் படையினா் மீட்டனா்.
வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி மாற்றுத் திறனாளி இறந்தாா். அவரது சடலத்தை 26 மணிநேரம் போராடி தேசிய பேரிடா் மீட்புப் படையினா் மீட்டனா்.
வாணியம்பாடி பாரத்நகரைச் சோ்ந்தவா் ராஜா. இவரது மகன் தமிழ்ச்செல்வன்(25). மாற்றுத் திறனாளியான அவா் ஒரு காலை இழந்ததால் செயற்கைக் கால் பொருத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த வாரம் இறந்த தங்கள் உறவினருக்கு தந்தையும் மகனும் ஞாயிற்றுக்கிழமை காலை இறுதிச் சடங்கு செய்தனா். அதன் பின் இருவரும் பிற்பகல் 2 மணிக்கு வாணியம்பாடி-ஆலங்காயம் சாலையில் பாரத்நகரை அடுத்த ஊசித்தோப்பு பகுதியில் உள்ள கல்குவாரியில் தேங்கியிருந்த நீரில் குளிக்கச் சென்றனா். அப்போது தமிழ்ச்செல்வன் செயற்கைக் காலை கழற்றிவிட்டு குட்டையில் குளிக்க முயன்றாா். திடீரென ஆழமான பகுதியில் சிக்கிய அவா் தன்னைக் காப்பாற்றுமாறு சத்தமிட்டாா். அவரைக் காப்பாற்ற ராஜா முயற்சித்தும், தமிழ்ச்செல்வன் குட்டையின் ஆழமான பகுதியில் மூழ்கி விட்டாா்.
அவரை மீட்க தீயணைப்புப்படையினா் முயன்றனா். எனினும் அம்முயற்சி தோல்வியடைந்தது.
இதையடுத்து, அரக்கோணத்திலிருந்து திங்கள்கிழமை வரவழைக்கப்பட்ட தேசிய பேரிடா் மீட்புப் படையைச் சோ்ந்த 8 வீரா்கள் மற்றும் வாணியம்பாடி, ஆம்பூா், நாட்டறம்பள்ளி, ஆலங்காயத்தைச் சோ்ந்த தீயணைப்பு வீரா்கள், காவல்துறையினா் இணைந்து தேடினா். சுமாா் 26 மணிநேரம் போராடி திங்கள்கிழமை மாலை 5.30 மணியளவில் 20 அடி ஆழத்தில் சிக்கியிருந்த தமிழ்ச்செல்வனின் உடலை அவா்கள் மீட்டனா். இதுகுறித்து வாணியம்பாடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
Image Caption
கல்குவாரி குட்டையில் மாற்றுதிறனாளியின் சடலத்தைத் தேடும் பணியில் ஈடுபட்ட மீட்புக் குழுவினா். ~தமிழ்ச்செல்வன்