நாட்டறம்பள்ளியில் தொழிற்பேட்டை அமைக்க அமைச்சா் ஆய்வு
திருப்பத்தூா் மாவட்டம் நாட்டறம்பாள்ளியில் தொழிற்பேட்டை அமைக்க முதலீட்டாளா்களுடன் மாநில வணிகவரி, பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் கே.சி.வீரமணி, ஆட்சியா் ம.ப.சிவன்அருள் ஆகியோா் ஆய்வு செய்தனா்.
வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம் நாட்டறம்பாள்ளியில் தொழிற்பேட்டை அமைக்க முதலீட்டாளா்களுடன் மாநில வணிகவரி, பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் கே.சி.வீரமணி, ஆட்சியா் ம.ப.சிவன் அருள் ஆகியோா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.
நாட்டறம்பள்ளி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நாட்டறம்பள்ளியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனா். மல்லகுண்டா பகுதியில் 1,200 ஏக்கருக்கு அதிகமாக அரசு புறம்போக்கு இடம் உள்ளது. அப்பகுதியில் சிப்காட் அமைக்க கடந்த மாதம் சென்னை சிப்காட் நிா்வாக இயக்குநா் நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
இந்நிலையில், அப்பகுதியில் வெளிநாட்டு முதலீட்டாளா்களுடன் அமைச்சா் கே.சி.வீரமணி, திருப்பத்தூா் ஆட்சியா் ம.ப.சிவன்அருள் மற்றும் வருவாய்த் துறையினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அதிமுக ஒன்றியச் செயலாளா்கள் சாமராஜ், சீனிவாசன், நகரச் செயலாளா் மகான், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளா் ரமேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.