திருப்பத்தூர்

15 ஆண்டாக தேடப்பட்ட கர்நாடக பெண் மாவோயிஸ்ட் திருப்பத்தூர் எஸ்.பி.யிடம் சரண்

DIN

கர்நாடகத்தைச் சேர்ந்த பெண் மாவோயிஸ்ட் 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நிலையில், சமுதாயத்துடன் இணைந்து அமைதியான வாழ்க்கையை வாழ விரும்பி க்யூ பிரிவு காவல் துறையினர் மூலம் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன் சரணடைந்தார். இவர் மீது கர்நாடக மாநிலத்தில் 44 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக வேலூர் சரக காவல் துணைத்தலைவர் (டிஐஜி) ஏ.ஜி.பாபு தெரிவித்தார்.

கர்நாடக மாநிலம், சிமோகா மாவட்டத்தைச் சேர்ந்த பிரபா. இவருக்கு சந்தியா, மாது, நேத்திரா, விண்டு ஆகிய பெயர்களும் உள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) மாநில குழு உறுப்பினராக பொறுப்பு வகித்த இவர், கர்நாடக மாநிலம், சிபிஐ மாவோயிஸ்ட் இயக்கத்தின் மேற்குத்தொடர்ச்சி மலை சிறப்பு மண்டல குழுவுக்கு உட்பட்ட பகுதிகளில் மிக தீவிரமாக பணியாற்றியுள்ளார். இவர் மீது கர்நாடக மாநிலம், சிமோகா, உடுப்பி மாவட்டங்களில் 44 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2006 -ஆம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்து வந்த பிரபா குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு கர்நாடக அரசு ரூ.5 லட்சம் சன்மானம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், 15 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த பெண் மாவோயிஸ்ட் பிரபா, அமைப்பில் இருந்து வெளிவந்து அமைதியான வாழ்வை சமுதாயத்துடன் இணைந்து வாழ வேண்டி காவல்துறை முன் சரணடைய விரும்புவதாக திருப்பத்தூர் க்யூ பிரிவு போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். அதன்பேரில், பிரபா திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் முன்பு சனிக்கிழமை சரணடைந்ததாக வேலூர் சரக காவல் துணைத்தலைவர் (டிஐஜி) ஏ.ஜி.பாபு தெரிவித்தார். இதுகுறித்து அவர் வேலூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது - மாவோயிஸ்ட் பிரபாவின் கணவர் பி.ஜி.கிருஷ்ணமூர்த்தி மாவோயிஸ்ட் இயக்க மத்தியக்குழு உறுப்பினராகவும், மேற்கு தொடர்ச்சி சிறப்பு மண்டலக்குழு பொறுப்பாளராகவும் உள்ளார். 

கர்நாடக மாநிலத்தில் உள்ள 25க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பி.ஜி.கிருஷ்ணமூர்த்தி கடந்த நவம்பர் 9-ஆம் தேதி கேரள மாநில போலீஸாரால் கைது செய்யப்பட்டார். தனது கணவர் கைதான பிறகு பிரபா மாவோயிஸ்ட் இயக்க செயல்பாடுகளிலிருந்து விலகி பொது வாழ்வுக்கு திரும்ப முடிவு செய்துள்ளார். மேலும், அவர் பக்கவாத நோய் காரணமாக அவதியுற்று வரும் நிலையில் சரணடையும் முடிவை எடுத்துள்ளார். தீவிரவாத நடவடிக்கைகளை கைவிட்டு இயல்பு வாழ்க்கை வாழ முற்படும் மாவோயிஸ்ட் இயக்கத்தினரை புனரமைத்து அவர்களுக்கு வேண்டிய வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் தற்போது தமிழக அரசு சரணடைதல், புனரமைப்புக் கொள்கையை வடிவமைத்து செயல்படுத்தி வருகிறது.

அதன்படி சரணடையும் அவர்கள் கட்சியில் வகித்த பதவியின் அடிப்படையில் ரூ.1.5 லட்சம் முதல் ரூ. 2.5 லட்சம் வரை மறுவாழ்வு நிதி வழங்கவும், மாத உதவித் தொகையாக மூன்று ஆண்டுகளுக்கு ரூ.4000 வழங்கவும் தமிழக அரசு ஆணை பிறப்பித்து செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு தலைமறைவாக உள்ள மாவோயிஸ்டு மனந்திருந்தி, தீவிரவாத நடவடிக்கைகளை கைவிட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப தமிழக காவல்துறை தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அவ்வாறு சரணடையும் மாவோயிஸ்டுகளுக்கு வாழ்வு புனரமைப்புக்காக அனைத்து விதமான உதவிகளும் மேற்கொள்ளப்படும். 
இது போன்ற தீவிரவாத முயற்சிகளையும் தமிழக காவல்துறை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோருக்கு மனந்திருந்தி இயல்பு வாழ்க்கையில் ஈடுபட இந்நிகழ்வு தூண்டுகோலாக அமையும் என்றார்.

அப்போது, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் உடனிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரபு மொழியில் பாரதிதாசனின் கவிதைகள் நூல்

சொகுசுப் பேருந்து, காா் மோதல்: பெண் உயிரிழப்பு, 3 போ் காயம்

தொழிலாளி கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை: விழுப்புரம் நீதிமன்றம் தீா்ப்பு

எஸ்.பி. அஞ்சலி...

தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT