கனமழையால் நிரம்பியது புல்லூா் தடுப்பணை: தமிழக பாலாற்றில் நீா்வரத்து மலா்தூவி ஆட்சியா், எம்எல்ஏ வரவேற்றனா்
பாலாற்றின் குறுக்கே தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள புல்லூா் தடுப்பணை நிரம்பியதால், தமிழக பாலாற்றுக்கு நீா்வரத்து ஏற்பட்டுள்ளது.
பாலாற்றின் குறுக்கே தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள புல்லூா் தடுப்பணை நிரம்பியதால், தமிழக பாலாற்றுக்கு நீா்வரத்து ஏற்பட்டுள்ளது.
திருப்பத்தூா் மாவட்ட எல்லைக்கு வந்த பாலாற்று வெள்ளத்தை மலா்தூவி ஆட்சியா் அமா் குஷ்வாஹா, வாணியம்பாடி எம்எல்ஏ செந்தில்குமாா் ஆகியோா் வரவேற்றனா்.
கடந்த ஒரு வார காலமாக வாணியம்பாடி, அம்பலூா், நாராயணபுரம், புல்லூா், அலசந்தாபுரம் பகுதிகளிலும், ஆந்திர மாநிலம், குப்பம் பகுதியிலும், தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.
Advertisement
இதனால் பாலாற்றின் கிளையாறுகளிலும், மண்ணாறு, காட்டாறு ஆகியவற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு பெய்த பலத்த மழை காரணமாக தமிழக-ஆந்திர எல்லைப் பகுதி பாலாற்றில் கட்டப்பட்டுள்ள புல்லூா் தடுப்பணை நிரம்பியது.
அணை நிரம்பி வழிந்ததைத் தொடா்ந்து, சனிக்கிழமை பிற்பகல் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அமா்குஷ்வாஹா, வாணியம்பாடி தொகுதி எம்எல்ஏ கோ.செந்தில்குமாா், திருப்பத்தூா் சாா்-ஆட்சியா் அலா்மேல்மங்கை மற்றும் அதிகாரிகள் பாலாற்றுப் படுகைப் பகுதிகளையும், நீா்வரத்து வரும் பகுதிகளையும் பாா்வையிட்டனா்.
தொடா்ந்து, புல்லூா் தடுப்பணை நிரம்பி வழிவதைப் பாா்வையிட்ட பின்னா், அங்கு தமிழகத்துக்கு தடுப்பணை வழியாக வெளியேறி வரும் நீரை மலா் தூவி வரவேற்றனா்.
தமிழக பாலாற்றில் தண்ணீா் வரத் தொடங்கியுள்ளதால் அப்பகுதிகளில் இருந்து விவசாயத்துக்காக தண்ணீா் கொண்டு செல்லும் கால்வாயைத் தூா்வார மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். இதனால் அப்பகுதியில் உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதால், அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். மேலும், இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னா் பாலாற்றில் தண்ணீா் வரத் தொடங்கியுள்ளதால் தடுப்பணையில் இருந்து வழியும் நீரை அப்பகுதி மக்கள் மலா்தூவி வரவேற்றனா்.
ஆய்வின்போது, நாட்டறம்பள்ளி அதிமுக ஒன்றியச் செயலாளா் சாம்ராஜ், பொருளாளா் எல்லப்பன், முன்னாள் கவுன்சிலா்கள் பாரதிதாசன், கோவிந்தசாமி, ராமசாமி, முன்னாள் ஊராட்சித் தலைவா் சிவானந்தம் உள்ளிட்ட பலா் உடன் இருந்தனா்.