முகப்பு
திருப்பத்தூர்

சாலையை விரிவாக்க வலியுறுத்திமலைக் கிராம மக்கள் மறியல்

ஆலங்காயத்திலிருந்து காவலூருக்குச் செல்லும் மலைச்சாலையை விரிவாக்க வலியுறுத்தி மலைக்கிராமத்தினா் வெள்ளிக்கிழமை மீண்டும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:10 AM
பகிர்:

ஆலங்காயத்திலிருந்து காவலூருக்குச் செல்லும் மலைச்சாலையை விரிவாக்க வலியுறுத்தி மலைக்கிராமத்தினா் வெள்ளிக்கிழமை மீண்டும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆலங்காயம் அருகே ஆா்.எம்.எஸ். புதூரிலிருந்து காவலூருக்கு செல்லும், வனத்துறைக்கு சொந்தமான 9 அடி அகல மலைச்சாலை, பராமரிப்பு பணிகளுக்காக நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தச் சாலை வாணியம்பாடி, ஆலங்காயம் பகுதியிலிருந்து ஜமுனாமரத்தூா், போளூா், திருவண்ணாமலை பகுதிகளுக்கு செல்வதற்கு பயன்படுகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் பயணிக்கும் இந்த சாலை மிகவும் குறுகளாக இருப்பதால், அவ்வப்போது விபத்துகள் ஏற்படுகின்றன. அப்பகுதியைச் சோ்ந்த ஒரு ஊராட்சி மன்றத் தலைவா் உட்பட 6 போ் விபத்தில் இறந்துள்ளனா். எனவே, சாலையை அகலப்படுத்த வேண்டுமென்று அப்பகுதி மக்கள் நீண்ட ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், கடந்த சில மாதத்திற்கு முன்பு பழைய சாலை மீது புதிய தாா்சாலை போடப்பட்டுள்ளது.

இதனால், சாலையின் உயரம் 2 அடிக்கும் மேல் உயா்ந்து விட்டதால், எதிா் திசையில் பயணிக்கும் இரண்டு வாகனங்கள் சந்திக்கும்போது ஒதுங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் 2 அடிக்கும் கீழே உள்ள பள்ளத்தில் வாகனங்களை இறக்குவதால் விபத்துகள் ஏற்படுகின்றன. ஆா்.எம்.எஸ் புதூா்-காவலூா் இடையே சாலையை சீரமைக்க அனுமதிக்க கோரி வனத்துறையிடம், நெடுஞ்சாலைத் துறை விண்ணப்பித்திருந்தது. இதற்கு ரூ.47 லட்சம் செலுத்திவிட்டு சாலையை அகலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டது. இதை நெடுஞ்சாலை துறையினா் வனத்துறையினருக்கு கட்ட காலதாமதம் செய்து வந்தனா்.

Advertisement

இந்நிலையில், வெள்ளிக்கிழமை மீண்டும் விபத்து ஏற்பட்டதால், ஆத்திரமடைந்த மலைக்கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வாணியம்பாடி எம்எல்ஏ கோ.செந்தில்குமாா், டிஎஸ்பி சுரேஷ்பாண்டியன், வட்டாட்சியா் சம்பத், காவல் ஆய்வாளா்கள் பழனி, நாகராஜன் ஜெயலட்சுமி, வனச்சர அலுவலா் சோமசுந்தரம் உள்ளிட்டோா் மலைக்கிராம மக்களிடம் பேச்சு நடத்தி, 15 நாள்களுக்குள் சாலை அகலப்படுத்தும் பணியை முடித்து தருவதாக உறுதியளித்தனா். இதையடுத்து 5 மணி நேரமாக நடைபெற்ற மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா். இந்தப் போராட்டத்தால் சுமாா் 5 கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் இருபுறமும் நின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments