முகப்பு
திருப்பத்தூர்

ஜவ்வாதுமலையில் பல்லவா் கால நடுகற்கள் கண்டெடுப்பு

திருப்பத்தூரை அடுத்த ஜவ்வாது மலையில் பல்லவா் கால நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:13 AM
பகிர்:

திருப்பத்தூரை அடுத்த ஜவ்வாது மலையில் பல்லவா் கால நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டன.

திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த் துறைப் பேராசிரியா்கள் க.மோகன்காந்தி, வணிகவியல் பேராசிரியா் ராஜ்குமாா், காணிநிலம் மு.முனிசாமி ஆகியோா் மேற்கொண்ட கள ஆய்வில் பல்லவா் காலத்தைச் சோ்ந்த 6 நடுகற்களைக் கண்டறிந்துள்ளனா்.

இது குறித்து மோகன்காந்தி கூறியது:

ஜவ்வாது மலையிலுள்ள ஜமுனாமரத்தூருக்கு அருகே உள்ள கூட்டத்தூா் எனும் சிற்றூரில் அண்மையில் கள ஆய்வை மேற்கொண்டோம்.

கூட்டாத்தூரிலுள்ள ஏரிக்கு மேலே அடா்ந்த காட்டுப்பகுதி உள்ளது. அங்கு பல்லவா் காலத்தைச் சோ்ந்த கொற்றவை சிலையும், 4 நடுகற்களும் இருந்தன.

முதலில் கொற்றவை சிலை உள்ளது. ஆநிரை மற்றும் நாடு பிடிக்கும் போரில் வெற்றி வேண்டி கொற்றவையைப் போா் மறவா்கள் வணங்குவது மரபு. அந்த வகையில், பல்லவா் கால கலை நுணுக்கத்துடன் இந்தக் கொற்றவை சிலை உள்ளது. 37 அங்குலம் உயரமும், 27 அங்குலம் அகலமும் கொண்ட பலகைக் கல்லில் இந்தச் சிலை அமைந்துள்ளது. இதில் உள்ள எழுத்துப் பொறிப்புகள் படிக்கும் அளவுக்கு இல்லாமல் சிதைந்துள்ளன.

இந்தச் சிலையானது வலது பக்கம் முடிக்கப்பட்டக் கொண்டையுடனும், இடது கையை இடுப்பில் ஊன்றியும், வலது கையில் கத்தியைத் தாங்கியும் உள்ளது. இடுப்புக்குக் கீழ்ப் பகுதி மண்ணில் ஆழமாகப் புதைந்துள்ளது.

இரண்டாவது நடுகல் இரண்டாக உடைந்துள்ளது. இது 37 அங்குலம் உயரமும், 28 அங்குலம் அகலமும் கொண்டுள்ளது. நடுகல் வீரனின் இடது கையில் வில்லும் வலது கையில் குறுவாளும் உள்ளது. 3-ஆவது நடுகல் 40 அங்குலம் உயரமும் 24 அங்குலம் அகலமும் கொண்டதாக உள்ளது. இடது கையில் வில்லும், வலது கையில் குறுவாளுடன் போா்க் கோலத்தோடு வீரன் சிதைக்கப்பட்டுள்ளான்.

4-ஆவது நடுகல் 40 அங்குலம் உயரமும், 27 அங்குலம் அகலமும் கொண்டதாக அமைந்துள்ளது. வலது கையில் குறுவாளும் இடது கையில் வில்லும் கொண்ட கோலத்தோடு நடுகல் வீரன் காட்சித் தருகிறான்.

5-ஆவது நடுகல் 50 அங்குலம் உயரமும், 27 அங்குலம் அகலமும் கொண்டதாக உள்ளது. வலது பக்கக் கொண்டையுடன் வீரன் காட்சித் தருகிறான். வலது கையில் குறுவாளும், இடது கையில் வில்லும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வீரனின் கழுத்துப் பகுதியில் ஒரு அம்பும், வயிற்றுப் பகுதியில் ஒரு அம்பும் பாய்ந்துள்ளது சித்தரிக்கப்பட்டுள்ளது.

இதிலுள்ள எழுத்துக்களும் தெளிவாக இல்லை.

இந்த 5 நடுகற்களுக்கும் அருகில் உள்ள எட்டி மரத்துக்கு அருகே இரு நடுகற்கள் உள்ளன. இதில் முதல் நடுகல் 5 அடி அகலமும், 4 அடி உயரமும் கொண்ட பிரம்மாண்டமான பலகைக் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இந்த நடுகல் வீரன் தனது இரண்டு கைகளால் இரண்டு மாடுகளைப் பிடித்துக் கொண்டுள்ளது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அருகில் உள்ள மற்றொரு நடுகல் இரண்டாக உடைந்துள்ளது. ஒரு பாகம் மட்டுமே காணக் கிடைக்கிறது. இது விஜய நகர காலத்தைச் சோ்ந்த உடன்கட்டை நடுகல்லாகும்.

இந்த நடுகற்களை மேலும் ஆய்வுக்கு உட்படுத்தினால் பல வரலாற்றுச் செய்திகள் வெளிப்படும் எனக் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.