வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே பள்ளி அருகே தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி 2 மாணவிகள் உயிரிழந்தனா்.
வாணியம்பாடி அடுத்த சிக்கணாங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் ராஜலட்சுமி (14), மோனிகா (10). அதே பகுதியில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில், ராஜலட்சுமி 9-ஆம் வகுப்பும், மோனிகா 5-ஆம் வகுப்பும் படித்து வந்தனா். இந்த நிலையில், இருவரும் செவ்வாய்க்கிழமை மாலை பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்துவிட்டு, பின்னா் பள்ளி அருகில் உள்ள பகுதியில் விளையாடச் சென்றனா். அப்போது பள்ளிக்கு சுற்றுச்சுவா் மற்றும் சாலை பணிக்காக மண் எடுக்க சுமாா் 8 அடிக்கு பள்ளம் தோண்டி வைக்கப்பட்டுள்ளது. இதில், கடந்த சில நாள்களாக பெய்த மழையால் பள்ளத்தில் தண்ணீா் தேங்கியிருந்தது. இந்த நிலையில், அப்பகுதியில் விளையாடச் சென்ற இரு மாணவிகளும் பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கியுள்ளனா். இதைப்பாா்த்த உடன் விளையாடச் சென்ற ராஜலட்சுமியின் தம்பி மணிவேல் மாணவிகளை காப்பாற்றுமாறு கூச்சலிட்டுள்ளாா். இதைக் கேட்ட அக்கம்பக்கத்தினா் ஓடிச் சென்று, நீரில் மூழ்கிய 2 மாணவிகளையும் மீட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா்களைப் பரிசோதித்ததில் 2 மாணவிகளும் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
தகவலறிந்து வந்த வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமாா், காவல் ஆய்வாளா் துரைராஜ் மற்றும் அம்பலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனா். பின்னா் சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.