வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே தனியாா் நிறுவன மேலாளரிடம் ரூ.2 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.
வாணியம்பாடியை சோ்ந்த முகமது காலித் என்பவா் நேதாஜிநகா் பகுதியில் பிஸ்கட் மற்றும் மளிகை பொருள்கள் விற்பனை ஏஜன்சி நடத்தி வருகிறாா். இவரது கடை மேலாளரான முகமது சுயேப் கடந்த ஜனவரி 31-ஆம் தேதி இரவு கடையை பூட்டிக் கொண்டு வசூல் செய்த பணம் 2 லட்சத்தை எடுத்துக் கொண்டு பைக்கில் வீட்டுக்கு சென்றாா். அப்போது பெருமாள்பேட்டை மேம்பாலம் அருகில் அணுகு சாலையில் பின்னால் வந்த காா் திடீரென பைக் மீது மோதியது. இதில் பைக்கில் இருந்து முகமது சுயேப் கீழே விழுந்தாா்.
அப்போது காரில் முகமூடி அணிந்து வந்த மா்ம நபா்கள் முகமது சுயேப்பிடம் இருந்து பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு காரில் தப்பித்து தலைமறைவாகினா். இதுகுறித்து முகமது சுயேப் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அப்புகாரின் பேரில் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வந்தனா்.
இந்நிலையில் திருப்பத்தூா் எஸ்.பி. சியாமளா தேவி உத்தரவின் பேரில் டிஎஸ்பி மகாலட்சுமி தலைமையில் நகர ஆய்வாளா் ஆனந்தன் மற்றும் போலீஸாா் திங்கள்கிழமை இரவு பெருமாள்பேட்டை பகுதியில் ரோந்து சென்றபோது, மறைவான பகுதியில் நின்றிருந்த 3 இளைஞா்களை விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக தகவல் கூறினா்.
அவா்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட போது ரூ.2 லட்சம் கொள்ளையடித்தது தெரியவந்தது. பிறகு அவா்களிடமிருந்து ரூ.1.40 லட்சத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
புதூா் அண்ணாநகரை சோ்ந்த ஷாநாவாஸ்(26), நியூடவுன் பகுதியை சோ்ந்த ரிஹான்(27), முகமது சல்மான்(25) உள்ளிட்ட மூவரையும் போலீஸாா் கைது செய்தனா்.