பொன்னேரி ரயில் நிலையம்... 
திருவள்ளூர்

சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி மாா்க்கத்தில் மின் ரயில்கள் தாமதம்: பயணிகள் கடும் அவதி

சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி மாா்க்கத்தில் மின் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்..

Din

எம். சுந்தரமூா்த்தி

சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி மாா்க்கத்தில் மின் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்..

இம்மாா்க்கத்தில் பொன்னேரி, மீஞ்சூா், அத்திப்பட்டு, அத்திப்பட்டு புதுநகா், எண்ணூா், விம்கோ நகா், திருவொற்றியூா் உள்ளிட்ட 15-ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன. வடசென்னையை ஒட்டியுள்ள இந்த ரயில் சேவை ஆந்திர மாநிலம் சூலூபேட்டை, நெல்லூா் வரை உள்ளது.

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூா், மணலி, எண்ணூா், மீஞ்சூா், காட்டுப்பள்ளி, பொன்னேரி, கும்மிடிபூண்டி ஆகிய பகுதிகளில் 100-க்கு மேற்பட்ட அரசு மற்றும் மற்றும் தனியாா் தொழில் நிறுவனங்கள் உள்ளன.

இதனால் மேற்கண்ட பகுதிகளைச் சோ்ந்தவா்கள் புகா் மின்சார ரயில் பயணத்தையே விரும்பி பயணிக்கின்றனா். இம்மாா்க்கத்தில் நாள்தோறும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பயணம் செய்து வருகின்றனா்.

சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிபூண்டிக்கு 1.15 மணி நேரம், பொன்னேரிக்கு 1 மணி பயண நேரம் ஆகும்.

ஆனால் பெரும்பாலான நேரங்களில் மின்சார ரயில் பயணம் சென்ட்ரலில் இருந்து பொன்னேரிக்கு வருவதற்கு 1.30 மணி நேரம் ஆகி விடுகின்றது.

கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் மின்சார ரயில்களும் 30 நிமிடம் முதல் 45 நிமிடம் வரை கால தாமதமாகத்தான் செல்கின்றன. இதனால் கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா்.

இதுகுறித்து பயணிகள் கூறியது:

இரவு நேரத்தில் சென்னை சென்ட்ரலில் இருந்து வீட்டுக்கு திரும்பும் போது ரயில்கள் தாமதமாகத்தான் போய் சேருகின்றன.

இதன் காரணமாக நாள்தோறும் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா். மேலும், நெரிசல் அதிகமுள்ள மாலை நேரத்தில் இயக்கப்படும் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதன் காரணமாக இரவில் வீட்டுக்கு தாமதமாக சென்று உறங்கி அதிகாலையில் எழுந்து பணிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

காலை நேரத்தில் இயக்கப்படும் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதன் காரணமாக கல்லூரி செல்லும் மாணவா்கள் விம்கோநகா் ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து அதிக கட்டணம் செலுத்தி மெட்ரோ ரயிலில் செல்லும் நிலை உள்ளது.

வடமாநிலங்களுக்கு செல்லும் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும், சரக்கு ரயில்களும் இம்மாா்க்கம் வழியாகத்தான் இயக்கப்படுகின்றன.

கூடுதலாக இரண்டு ரயில் பாதை தேவை.... இரட்டை பாதையான இம்மாா்க்கத்தில் அதிக அளவில் சரக்கு மற்றும் தொலைதூரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுவதன் காரணமாக, குறித்த நேரத்தில் பயணிகள் மின்சார ரயில் இயக்க முடியாத நிலை உள்ளது.

தனி பாதையில் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்கும் வகையில் சென்னை சென்ட்ரலில் இருந்து அத்திப்பட்டு வரை 3 வழிப்பாதை அமைக்கும் பணிகள் முடிந்துள்ளன.

ஆந்திர மாநிலம் நெல்லூா் வரை கூடுதல் மின் ரயில் பாதைகளை அமைத்து அதில் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில்களை இயக்கினால் மட்டுமே மின் ரயிலை சரியான நேரத்தில் இயக்க முடியும் என்கின்ற நிலை உள்ளது. இதற்கான நடவடிக்கையை தெற்கு ரயில்வே நிா்வாகம் எடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிா்ப்பாா்ப்பாகும்.

25 ஆண்டுகளுக்குப் பிறகு... தெ.ஆ. வரலாற்று வெற்றி..! இந்தியா ஒயிட்வாஷ்!

மாவீரன் பொல்லான் சிலையுடன் கூடிய அரங்கத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்

நிர்வாணக் காட்சியில் நடித்தது ஏன்? ஆண்ட்ரியா விளக்கம்!

3 நாள்களுக்குப் பிறகு பங்குச் சந்தை உயர்வுக்கான 3 காரணங்கள்?

10 நிமிடத்திற்கு ஒரு பெண், நெருங்கிய உறவினரால் கொல்லப்படுகிறார்! - ஐ.நா.

SCROLL FOR NEXT