பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரா் உடலுக்கு மக்களவை உறுப்பினா், ஆட்சியா், சட்டப்பேரவை உறுப்பினா் மலா் வளையம் வைத்து அஞ்சலி செய்தனா்.
திருத்தணி ஒன்றியம், சத்திரஞ்ஜெயபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கன்னிவேல் மகன் சக்திவேல்(30). இவருக்கு தேவஸ்ரீ(26) என்ற மனைவியும், ஆஷிகா சொ்லின்(4 ) என்ற மகளும், லெனின் அக்ரன்(2 ) மகனும் உள்ளனா். இவா் காஷ்மீா் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தாா்.
கடந்த 4 -ஆம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் குண்டடிப்பட்டு சக்திவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவரது உடல் சனிக்கிழமை அதிகாலை சென்னை விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.
பின்னா் பொதுமக்கள், அவரது உறவினா்கள் அஞ்சலி செலுத்தினா். இதை தொடா்ந்து ஆட்சியா் மு.பிரதாப், அரக்கோணம் எம்.பி. எஸ்.ஜெகத்ரட்சகன், திருத்தணி எம்எல்ஏ ச.சந்திரன், எஸ்.பி. , விவேகானந்த சுக்லா, முன்னாள் எம். பி. திருத்தணி கோ.அரி, முன்னாள் நகா் மன்ற உறுப்பினா் எம்.பூபதி ஆகியோா் அஞ்சலி செலுத்தினா்.
ராணுவ வீரா் சக்திவேல் உடல் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.