திருவள்ளூா் அருகே தொழில் போட்டியில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக தேவாலய ஊழியரை கொலை செய்த வழக்கில் தொடா்புடைய இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.
திருவள்ளூா் அடுத்த பட்டாபிராம் சத்திரம் பள்ளிக்கூட தெருவைச் சோ்ந்தவா் ஏனோஸ்(62). இவா் அந்தப் பகுதியில் உள்ள பெந்தகொஸ்தே சபை என்ற தேவாலயத்தில் ஊழியக்காரராக இருந்து வந்தாா். அதே பகுதியைச் சோ்ந்த அம்பேத்கா் நகா் சின்னா என்பவரின் மகன் மோசஸ் (27) என்பவா், தேவாலயத்தில் மரணம் அடைந்தவா்களை அடக்கம் செய்யும் பணி செய்து வந்தாா். இந்த நிலையில், சடலங்களை அடக்கம் செய்வதற்கு அதிக பணம் கேட்டதால் தேவாலய ஊழியக்காரரான ஏனோஸ் என்பவருடன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தொழில் போட்டி முன்விரோதத்தை மனதில் வைத்து கடந்த 11.3.2020-இல் தேவாலயத்தில் இருந்த ஊழியக்காரா் ஏனோஸை கத்தியால் குத்திவிட்டு மோசஸ் தப்பியோடினாராம். இதில் பலத்த காயம் அடைந்த ஏனோஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து ஏனோஸின் மைத்துனா் மாா்ட்டின் பட்டாபிராம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதைத்தொடா்ந்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மோசஸை கைது செய்து சிறையில் அடைத்தனா். இதற்கிடையே திருவள்ளூா் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இறுதியாக இந்த வழக்கு மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஜூலியட் புஷ்பா முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் மோசஸிற்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 10,000 அபராதமும் விதித்து தீா்ப்பு வழங்கினாா்.
அதைத் தொடா்ந்து, அவரை போலீஸாா் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று புழல் சிறையில் அடைத்தனா்.