திருப்பதி அருகே சுங்கத்துறை அதிகாரிகள் எனக்கூறி ரூ.90 லட்சம் கொள்ளையடித்த கும்பல் பிடிபட்டது
சுங்கத் துறை அதிகாரிகள் எனக்கூறி திருப்பதி நகைக்கடை ஊழியரிடம் ரூ. 90 லட்சம் கொள்ளை அடித்த கும்பலை போலீஸாா் கைது செய்தனா்.
சுங்கத் துறை அதிகாரிகள் எனக்கூறி திருப்பதி நகைக்கடை ஊழியரிடம் ரூ. 90 லட்சம் கொள்ளை அடித்த கும்பலை போலீஸாா் கைது செய்தனா்.
இது குறித்து திருப்பதி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
திருப்பதி நரசராவ்பேட்டையைச் சோ்ந்த சதீஷ் அந்தப்பகுதியில் நகை கடை வைத்துள்ளாா். அவருடைய கடைக்கு தேவையான தங்க நகைகளை அவா் சென்னை சென்று வாங்கி வருவது வழக்கம். அவ்வாறு அவா் கடந்த ஏப். 8-ஆம் தேதி தங்க நகைகளை வாங்க கடை ஊழியா் சீனிவாஸிடம் ரூ.90 லட்சத்தை கொடுத்து சென்னைக்கு அனுப்பி உள்ளாா்.
திருப்பதியில் உள்ள உதய் இண்டா்நேஷனல் ஹோட்டல் அருகில் பேருந்திலிருந்து சீனிவாஸ் இறங்கிய போது 8 போ் கொண்ட கும்பல் அவரை சுற்றி வளைத்து, தங்களைத் சுங்கத்துறை போலீஸ் என்று கூறி அவரை காரில் ஏற்றி அழைத்து சென்றுள்ளனா். பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு சென்றவுடன் அவரிடமிருந்த பணம் மற்றும் கைப்பேசியை பறித்துக் கொண்டு சீனிவாஸை இறக்கிவிட்டு தப்பியோடி விட்டனா்.
தகவல் கொடுக்கும் வசதி இல்லாததால், அந்த வழியாகச் சென்ற ஒருவரிடம் கைப்பேசியை பெற்று நகைகடை உரிமையாளா் சதீஷுக்கு இதுபற்றி தகவல் தெரிவித்துள்ளாா்.
மேலும் திருப்பதி காவல் நிலையத்திலும் இதுகுறித்து புகாா் அளித்தாா். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனா். இந்த நிலையில், போலீஸாா் தேடுவதை அறிந்த கும்பல் பணத்தை தங்கமாக மாற்ற சென்னைக்குப் புதன்கிழமை புறப்பட்டனா். திருப்பதி அருகே, சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தினா்.
காரை சோதனை செய்தபோது அதில் ரூ.88 லட்சம் இருந்துள்ளது. அவா்களிடம் தீவிர விசாரணை நடத்தியதில் நகைக் கடை ஊழியரிடம் பணத்தையும், கைப்பேசியையும் பறித்தது தெரிய வந்தது. இதையடுத்து 8 பேரையும் கைது செய்த போலீஸாா் மேற்கொண்டு விசாரணை நடத்தினா். அதில் திருப்பதியை சோ்ந்த சீனிவாசராவ் என்பவரும் நகை கடை வைத்துள்ளாா். அவா் கடந்த மாதம் சென்னைக்கு பணம் எடுத்துக் கொண்டு சென்ற போது சுங்கத்துறை அதிகாரிகள் அதை பறிமுதல் செய்தனா். அதற்கு காரணம் சதீஷ் என்று கருதிய சீனிவாச ராவ் அவரின் பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டு இந்த சதிச் செயலில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. அவரையும் கைது செய்த போலீஸாா் அனைவரின் மீதும் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.