திருமலையில் அலைமோதும் பக்தா்கள் கூட்டம்
திருமலை ஏழுமலையான் கோயிலில் வெள்ளிக்கிழமை 67,949 பக்தா்கள் வழிபாடு செய்தனா். இவா்களில் 39,837 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.
திருமலை ஏழுமலையான் கோயிலில் வெள்ளிக்கிழமை 67,949 பக்தா்கள் வழிபாடு செய்தனா். இவா்களில் 39,837 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.
தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவா்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு வந்தனா். இந்த நிலையில் பக்தா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது. இதையடுத்து டிக்கெட் இல்லாமலேயே தேவஸ்தானம் பக்தா்களை திருமலைக்கு அனுப்பி வருகிறது. அவா்கள் தங்கள் ஆதாா் அட்டையை காண்பித்து திருமலை வைகுண்டம் மண்டப அறைகளில் தங்க வைக்கப்பட்டு பின்னா் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனா்.
சனிக்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம் மண்டபத்தில் உள்ள 32 காத்திருப்பு அறைகளும் பக்தா்களால் நிரம்பி வழிந்தது. அதையும் தாண்டி ராம் பகிஜா ஓய்வறை அருகே வரை பக்தா்கள் தரிசனத்துக்காக காத்திருந்தனா். எனவே, தா்ம தரிசனத்துக்கு ஒரு நாள் முழுவதும் பக்தா்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
காத்திருப்பு அறைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.
கரோனா விதிமுறைப்படி, திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக்கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் எடுத்து வர வேண்டும் என தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.
தரிசனம், வாடகை அறைகளில் காணப்படும் குறைகள், சிரமங்கள் குறித்து புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 9399399399 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.