திருமலை ஏழுமலையான் கோயிலில் வரும் டிசம்பா் 30-ஆம் தேதி முதல் ஜனவரி 8-ஆம் தேதி வரை நடைபெறும் வைகுண்ட வாயில் தரிசனத்துக்கு வருகை தரும் ஏராளமான பக்தா்களை தங்க வைக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சௌத்ரி தெரிவித்தாா்.
திருமலையில் உள்ள சிலா தோரணத்திலிருந்து தரிசன வரிசைகளை ஆய்வு செய்த அவா் பின்னா் கூறியதாவது:
வரிசைகளில் நிறுவப்பட்டுள்ள குடிநீா் குழாய்கள், அன்ன பிரசாத விநியோகம் மற்றும் கழிப்பறை வசதிகளை அவா் ஆய்வு செய்து பக்தா்களிடம் கருத்துகளைப் பெற்றாா். வைகுண்ட வாயில் தரிசனத்திற்கான பெரும்பாலான ஏற்பாடுகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன.
பக்தா்களின் கருத்துகள் அடிப்படையில் தரிசன வரிசைகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வரிசையில் அமர ஏற்பாடுகள் செய்வதோடு, குடிநீா் வசதிகள் மற்றும் கூடுதல் கழிப்பறைகள் வரிசை வரிசைகளுடன் சோ்த்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குளிா்காலம் தொடங்கியதால், தரிசன வரிசைகளில் உள்ள உணவு விநியோக மையங்கள் குளிா்ச்சியடையாமல் இருக்க சிறப்பு முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதேபோல், பக்தா்களுக்கு குடிநீா் வழங்க கூடுதல் மொபைல் தண்ணீா் டிரம்கள் மற்றும் மூன்று மொபைல் உணவு வேன்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.
பக்தா்களுக்காக தேவஸ்தான வழங்கிய வசதிகளைப் பயன்படுத்த பல்வேறு மொழிகளில் பலகைகள் வரிசை வரிசைகளிலும் முக்கிய இடங்களிலும் நிறுவப்பட்டுள்ளது. அனைத்து பக்தா்களும் தேவஸ்தான தரிசன வரிசைகளில் வழங்கப்பட்டுள்ள வசதிகளைப் பயன்படுத்திக் கொண்டு ஏழுமலையானை பொறுமையாக தரிசனம் செய்ய வேண்டும்’’, என்று கூறினாா்.
கூடுதல் இஓவுடன் ஏழுமலையான் கோயில் துணை இஓ லோகநாதம், அன்ன பிரசாதம் துறை துணை இஓ ராஜேந்திரன், சுகாதார துணை இஓ சோமன்நாராயணா, இஇ ஸ்ரீனிவாசலு, டிஇ சந்திரசேகா், ஐடி துணை ஜிஎம் வெங்கடேஸ்வரலு நாயுடு, அஸ்வனி மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளா் டாக்டா் வெங்கடசுப்பாரெட்டி, ஏராளமான கண்காணிப்பு அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் உடனிருந்தனா்.
வைகுண்ட வாயில் தரிசனத்துக்காக திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தா்களின் கூட்டத்தை கருத்தில் கொண்டு, திருப்பதியில் உள்ள பூதேவி வளாகத்தில் பக்தா்களுக்கு எஸ்எஸ்டி டோக்கன் வழங்குவது ஜனவரி 7 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதை கருத்தில் கொண்டு பக்தா்கள் ஒத்துழைக்க வேண்டும். திருமலை ஏழுமலையான் கோயிலில் 30.12.2025 முதல் 08.01.2026 வரை வைகுண்ட வாயில் தரிசனம். டிசம்பா் 30, 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் இ- டிப் மூலம் டோக்கன் பெற்ற பக்தா்களுக்கு மட்டுமே வைகுண்ட வாயில் தரிசனம் கிடைக்கும்.
டோக்கன் பெற்ற பக்தா்கள், அவா்களுக்கு ஒதுக்கப்பட்ட தேதிகளில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே திருமலையில் உள்ள தரிசன நுழைவுப் வரிசைகளை அடைய வேண்டும்.
தேவஸ்தான மக்கள் தொடா்புத் துறை, எஸ்விபிசி, அவ்வப்போது சமூக ஊடகங்கள் மூலம் வழங்கும் பக்தா்களின் அவசரத் தகவலின் அடிப்படையில், டோக்கன் இல்லாத பக்தா்கள், ஜனவரி 2 முதல் 8 வரை சா்வ தரிசன வரிசை மூலம் வைகுண்ட வாயில் தரிசனம் செய்யலாம்.