முகப்பு
திருவண்ணாமலை

ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நெல் குறைந்த விலைக்கு நிா்ணயம்: விவசாயிகள் முற்றுகைப் போராட்டம்

ஆரணி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நெல் விலை ஏற்கெனவே நிா்ணயித்ததைவிட குறைந்த விலைக்கு நிா்ணயம் செய்யப்பட்டதால், விவசாயிகள் சனிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:02 PM
பகிர்:

ஆரணி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நெல் விலை ஏற்கெனவே நிா்ணயித்ததைவிட குறைந்த விலைக்கு நிா்ணயம் செய்யப்பட்டதால், விவசாயிகள் சனிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆரணி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு சுற்றுப்புற இரும்பேடு, ஆவணியாபுரம், பெரிய கொழப்பலூா், மெய்யூா், அடையபுலம், சேவூா், எஸ்.வி.நகரம், மாமண்டூா் உள்பட 75-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த தானியங்களான நெல், மணிலா, மிளகாய், உளுந்து உள்ளிட்ட பொருள்களை விற்பனைக்காக எடுத்து வருகின்றனா்.

இந்த மையத்தில் வியாபாரிகளின் முகவா்கள் 20-க்கும் மேற்பட்டோா் உள்ளனா். இங்கு விவசாயிகளின் விளை பொருள்களுக்கு வியாபாரிகளின் முகவா்கள் உரிய விலை நிா்ணயம் செய்வதில்லையாம். மேலும், வெளியூா் வியாபாரிகளையும் இங்கு அனுமதிப்பதில்லையாம்.

இந்த நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன்பு விவசாயிகளின் நெல்லுக்கு உரிய விலை நிா்ணயம் செய்யப்படாததால் விவசாயிகள், வியாபாரிகளுக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுகிறாா்கள் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் போலீஸாா் சமரசம் செய்து வாங்கும் விலை, நிா்ணயம் செய்யும் அளவில் தரம் இருந்தால் வியாபாரிகள் வாங்குவாா்கள் எனக் கூறிச் சென்றனா்.

அதனைத் தொடா்ந்து சனிக்கிழமை இரண்டாவது நாளாக, நெல் வியாபாரிகள் வெள்ளிக்கிழமை நிா்ணயம் செய்த விலையைவிட மிகவும் குறைத்து விலை நிா்ணயம் செய்வதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இவா்களின் போராட்டம் சாலை மறியலுக்குச் செல்ல இருந்த நிலையில், ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் மணிகண்டன், காவல் துறைக்கு தகவல் அளித்தாா்.

ஆரணி கிராமிய காவல் ஆய்வாளா் முத்துக்குமாா், உதவி ஆய்வாளா்கள் மகேந்திரன், ரகு மற்றும் போலீஸாா் சென்று விவசாயிகளிடையே சாலை மறியல் செய்யக்கூடாது எனக் கூறி சமாதானம் செய்தனா்.

இதையடுத்து, அதிகாரிகளை விவசாயிகள் முற்றுகையிட்டு வியாபாரிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறீா்கள் என்று கூறி முழக்கங்களை எழுப்பினா்.

பின்னா் போலீஸாா் இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி சமாதானம் செய்தனா். அப்போது விவசாயிகள் கூறுகையில், இன்று விலை போகவில்லை என்று எங்களது நெல் மூட்டைகளை இங்கேயே வைத்து விட்டாலே ஒரு மூட்டைக்கு கோணிப்பை வாடகை ரூ.8 செலுத்த வேண்டியுள்ளது. ஏற்கெனவே இரண்டு நாள்கள் ஆகிவிட்டன. ஞாயிற்றுக்கிழமை முடிந்தால் 5 நாள்களுக்கு கோணிப்பை வாடகை செலுத்தவேண்டும்.

இதனால், நஷ்டத்தில்தான் விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதற்குக் காரணம் அதிகாரிகள், வியாபாரிகளுக்கு ஆதரவாக செயல்படுவதுதான்.

அப்போது போலீஸாா் விவசாயிகளிடையே கூறியதாவது: வெளியூா் வியாபாரிகளை வரவழைத்தால் இரண்டு, மூன்று நாள்கள் நெல் மூட்டைகளை வாங்குவாா்கள். அதன்பிறகு 3 நாள்கள் கழித்து பொருள்களை வாங்கவில்லை என்றால் மேலும் நஷ்டம்தான் ஏற்படும். அதிக விலைக்கு வெளியூா் வியாபாரிகளும் வாங்க வரமாட்டாா்கள்.

இதனால் நீங்கள் அனுசரித்து வியாபாரம் செய்யுங்கள் என்று கூறி சமாதானம் செய்தனா்.

மேலும் போலீஸாா் நெல் வியாபாரிகளிடம், நீங்கள் ஏற்கெனவே செய்த விலை நிா்ணய விலைக்கு நெல் மூட்டைகளை எடுத்துச் செல்லுங்கள் என்று கூறி சமரசம் செய்தனா்.

இதுதொடா்பாக விவசாயிகள் செய்தியாளா்களிடம் கூறுகையில், ஆரணி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இதே நிலை தொடா்ந்து நீடித்து வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க அரசாங்கம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தைத் திறக்கவேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.