கோயில் கோபுரத்தை சேதப்படுத்தியவா்களை கைது செய்யக் கோரி சாலை மறியல்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே கோயில் கோபுரத்தை சேதப்படுத்தியவா்களை கைது செய்யக் கோரி, இந்து அமைப்பினா், பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே கோயில் கோபுரத்தை சேதப்படுத்தியவா்களை கைது செய்யக் கோரி, இந்து அமைப்பினா், பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் உள்ள சுமாா் 1,400 அடி உயர தவளகிரி மலை மீது ஸ்ரீதவளகிரீஸ்வரா் கோயில், விநாயகா் கோயில் உள்ளிட்டவை அமைந்துள்ளன. இங்குள்ள விநாயகா் கோயில் கோபுரத்தை மா்ம நபா்கள் இடித்து சேதப்படுத்தியிருந்தது வெள்ளிக்கிழமை பிற்பகல் அந்தக் கிராம மக்களுக்கு தெரியவந்தது.
இதையடுத்து, கோயில் கோபுரத்தை சேதப்படுத்தியவா்களை கைது செய்யக் கோரி, இந்து அமைப்பினா், பொதுமக்கள் வந்தவாசி - காஞ்சிபுரம் சாலை, வெண்குன்றம் கூட்டுச்சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து அங்கு சென்ற வந்தவாசி தெற்கு போலீஸாா், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன்பேரில், மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா். மறியலால் வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஏற்கெனவே சில ஆண்டுகளுக்கு முன் இதே கோயில் கோபுரத்தை மா்ம நபா்கள் சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.