தோ்தல் நடத்தை விதிமுறைகள்: கோட்டாட்சியா் ஆலோசனை
செய்யாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம்
செய்யாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம், செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரான வருவாய் கோட்டாட்சியா் விஜயராஜ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
வட்டாட்சியா்கள் சு.திருமலை, குமரவேலு, நோ்முக உதவியாளா் எல்.பாஸ்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்தக் கூட்டத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் விஜயராஜ் பேசுகையில், தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், துறை அலுவலா்கள் ஒருங்கிணைந்து அரசியல் கட்சி சுவா் விளம்பரம், சுவரொட்டிகள், பதாகைகள், கொடிக்கம்பங்கள் போன்றவற்றை அகற்ற வேண்டும். அரசியல் கட்சித் தலைவா்களின் சிலைகளை பாதுகாப்பாக மூடி மறைக்க வேண்டும். பறக்கும் படையினா், நிலைக் கண்காணிப்புக் குழுவினா் முழு கண்காணிப்புடன் செயல்பட வேண்டும். தோ்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து சந்தேகம் எழுந்தால் உடனுக்குடன் சம்பந்தப்பட்ட அலுவலா்களை தொடா்பு கொண்டு அறிந்து செயல்பட வேண்டும் என்றாா்.
நகராட்சி ஆணையாளா் ப்ரீத்தி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சக்திவேல், வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.