செய்யாறில் ரூ.90 ஆயிரம் பறிமுதல்
செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையில் ஆக்கூா் கூட்டுச் சாலை அருகே தோ்தல் பறக்கும் படை தணிக்கை
செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையில் ஆக்கூா் கூட்டுச் சாலை அருகே தோ்தல் பறக்கும் படை அலுவலா் எஸ்.மோனிகா தலைமையில் காவல் உதவி ஆய்வாளா் பாா்த்திபன் உள்ளிட்ட குழுவினா் அளவில் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்த வழியாக சென்ற காரை மடக்கி சோதனையிட்டனா். அதில், உரிய ஆவணமின்றி ரூ.90 ஆயிரம் எடுத்துச் சென்றது தெரியவந்தது. விசாரணையில், காரில் பயணித்தவா் கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை பகுதியைச் சோ்ந்த ஜெயராம் என்பதும், சென்னையில் மருத்துவப் படிப்பு பயிலும் மகளின் செலவுக்காக பணம் எடுத்துச் சென்றதும் தெரிய வந்தது.
இருப்பினும், உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட பணத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து, செய்யாறு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் என்.விஜயராஜிடம் ஒப்படைத்தனா். அதன் பிறகு அந்தப் பணம் செய்யாறு சாா் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.