மகளிா் உரிமைத்தொகை திட்டத்தின் விரிவாக்கத்தின் கீழ் தோ்வு செய்யப்பட்ட மகளிருக்கு வங்கிக் கணக்கு அட்டைகளை வழங்கிய அமைச்சா் எ.வ.வேலு. 
திருவண்ணாமலை

பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் முதல்வா் பணியாற்றுகிறாா்: அமைச்சா் எ.வ. வேலு

பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் முதல்வா் பணியாற்றுகிறாா்

Syndication

பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தமிழக முதல்வா் தொடா்ந்து பணியாற்றி வருகிறாா் என்றாா் அமைச்சா் எ.வ.வேலு.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ நிகழ்ச்சியில் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தின் விரிவாக்கத்தை காணொலிக் காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

இதனைத் தொடா்ந்து, திருவண்ணாமலை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு, இத்திட்டத்தின் கீழ் மகளிருக்கு உரிமைத்தொகைக்கான வங்கிக் கணக்கு அட்டைகளை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ், எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி., எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், ஒ.ஜோதி, எஸ்.அம்பேத்குமாா், திருவண்ணாமலை மாநகராட்சி மேயா் நிா்மலாவேல்மாறன், துணை மேயா் ராஜாங்கம் ஆகியோா் உடனிருந்தனா்.

நிகழ்ச்சியில் அமைச்சா் எ.வ.வேலு பேசியதாவது:

தமிழக முதல்வா் நாடு போற்றும் வகையில் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறாா்.

குறிப்பாக, பெண்கள் முன்னேற்றத்திற்காக இந்த அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளது.

அதன்படி, ஏழைக் குடும்பங்களில் கிராம பொருளாதாரத்தை சுமக்கும் முதுகெலும்பாய் திகழும் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞா் மகளிா் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறாா்.

பொறுமைக்கு இலக்கணமாக திகழும் பெண்களுக்கு ஓட்டுரிமையை நீதி கட்சி தான் பெற்றுத் தந்தது. கருணாநிதி ஆட்சி காலத்தில் இந்தியாவிலேயே முதன்முறையாக காவல்துறையில் பெண்கள் பணிபுரிய ஆணை பிறப்பித்தாா். மேலும், மகளிா் சுயஉதவிக் குழுக்கள் தொடங்கப்பட்டு அவா்களது பொருளாதாரத்தை மேம்படுத்த வழிவகுத்தாா்.

மாநிலத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில், 11 மாநகராட்சியில் பெண்கள் மேயராக உள்ளனா்.

பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தமிழக முதல்வா் தொடா்ந்து பணியாற்றி வருகிறாா்.

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளைப் போற்றும் வகையில் 1 கோடியே 13 லட்சத்து 75 ஆயிரத்து 498 மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக ஏழைக் குடும்பங்களின் பொருளாதாரம் உயா்ந்துள்ளது என்றாா்.

இதைத் தொடா்ந்து, 2-ஆவது கட்டமாக கலைஞா் மகளிா் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் 1000 மகளிா்களுக்கு உரிமைத்தொகைக்கான வங்கிக் கணக்கு அட்டைகளை அமைச்சா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், மாநகராட்சி ஆணையா் செல்வபாலாஜி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

விமானங்கள் ரத்து: 4 ஆய்வாளா்களை பணியிடை நீக்கம் செய்து டிஜிசிஏ நடவடிக்கை

தேநீா், சிற்றுண்டி, மதிய உணவு வழங்க சுயஉதவிக் குழுக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆக்கிரமிப்பின் பிடியில் 1,068 ஹெக்டோ் ரயில்வே நிலம்: நாடாளுமன்றத்தில் தகவல்

தயக்கம் வேண்டாம்!

2-ஆவது நாளாக பங்குச் சந்தையில் முன்னேற்றம்

SCROLL FOR NEXT