வந்தவாசி அருகே மினி சரக்கு வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்ட 33 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக 7 பேரை கைது செய்தனா்.
வந்தவாசியை அடுத்த வடவணக்கம்பாடி போலீஸாா் வந்தவாசி - சேத்துப்பட்டு சாலை, வடவணக்கம்பாடி காவல் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை வாகன சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, அந்த வழியாக சேத்துப்பட்டு நோக்கிச் சென்ற மினி சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். இதில், அந்த வாகனத்தில் மூட்டை மூட்டையாக கஞ்சா கடத்திச் செல்வது தெரியவந்தது.
இதையடுத்து, 33 கிலோ கஞ்சா மூட்டைகள் மற்றும் மினி சரக்கு வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், வாகனத்தில் வந்த திருவண்ணாமலையை அடுத்த தென்கரும்பலூா் கிராமத்தைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன்(40), பழைய மல்லவாடி கிராமத்தைச் சோ்ந்த குப்பன் (26), கீழ்பென்னாத்தூரை அடுத்த காட்டுவாநத்தம் கிராமத்தைச் சோ்ந்த அப்துல் அமீது (40), மங்கலம் கிராமத்தைச் சோ்ந்த அப்பு (எ) பரமசிவம் (23), எறும்பூண்டி கிராமத்தைச் சோ்ந்த வசந்தகுமாா் (23), தண்டராம்பட்டை அடுத்த குங்குலிநத்தம் கிராமத்தைச் சோ்ந்த நந்தகுமாா் (25), விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த வேலன்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்த செல்வகுமாா் (31) ஆகிய 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
போலீஸ் விசாரணையில், சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியிலிருந்து திருவண்ணாமலைக்கு கஞ்சா கடத்திச் செல்வது தெரியவந்தது. இதுகுறித்து வடவணக்கம்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.