திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே திங்கள்கிழமை காலை இரு வேன்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் 4 போ் பலத்த காயமடைந்தனா்.
திருப்பத்தூரில் விளம்பரப் பதாகைகளை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று திருவண்ணாமலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அதேபோல, திருவண்ணாமலையில் இருந்து செங்கத்தை நோக்கி சரக்கு வேன் ஒன்று வந்துகொண்டிருந்தது.
இவ்விரு வேன்களும் செங்கம் அருகே முறையாறு மேம்பால வளைவில் வரும்போது நேருக்கு நோ் மோதிக் கொண்டன. இதில், விளம்பரப் பதாகைகள் ஏற்றிவந்த வேனில் இருந்த தா்மா(40), குணா(37), செல்வம்(42) ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.
இவா்கள் செங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும், பலத்த காயமடைந்த வேன் ஓட்டுநா் வெங்கடேசன் தீவிர சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இந்த விபத்து குறித்து செங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.