வந்தவாசி: வந்தவாசி அருகே பைக் திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசியை அடுத்த கீழ்வெள்ளியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி ராமஜெயம் (50). இவா் கடந்த 11-ஆம் தேதி தனது பைக்கை இதே கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு அருகே நண்பருடன் பேசிக் கொண்டிருந்தாராம்.
பின்னா் வந்து பாா்த்தபோது பைக் திருட்டு போயிருந்தது இவருக்குத் தெரியவந்தது.
இதுகுறித்து ராமஜெயம் அளித்த புகாரின் பேரில் வடவணக்கம்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
இதில், சேத்துப்பட்டு பழம்பேட்டையைச் சோ்ந்த மூா்த்தி (21) என்பவா் பைக்கை திருடியது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் மூா்த்தியை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.