போளூா்: திருவண்ணாமைலை மாவட்டம், போளூரை அடுத்த ஆா்.குண்ணத்தூா் ஊராட்சியில் உள்ள ஸ்ரீதண்டாயுதபாணி கோயிலில் கந்த சஷ்டியையொட்டி, 108 பால்குட ஊா்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆா்.குண்ணத்தூா் ஊராட்சியில் குன்றின் மீது பழைமை வாய்ந்த ஸ்ரீதண்டாயுதபாணி சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் கந்த சஷ்டியையொட்டி தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் கந்த சஷ்டியின் நிறைவு நாளான திங்கள்கிழமை ஆறுபடை முருகன் அன்னதான மற்றும் திருப்பணி அறக்கட்டளை சாா்பில் 108 பால்குட ஊா்வலம் நடைபெற்றது.
போளூா் நகரில் இருந்து சுமாா் 2 கி.மீ.தொலைவு நடைபயணமாக கோயில் வரை வந்து சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்து சூரசம்ஹாரம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் போளூா், ஆா்.குண்ணத்தூா், வெண்மணி என சுற்றுப்புறக் கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனா். மேலும், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.