வாலாஜாபேட்டை ஒன்றிய அமமுக செயலாளர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் பாஜக-வில் திங்கள்கிழமை இணைந்தனர். அவர்களுக்கு பாஜக மாநிலத் துணைத் தலைவர்கள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
வேலூர் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் மண்டல் அளவிலான உறுப்பினர் சேர்க்கைக்கான மாவட்ட அளவிலான பயிலரங்கம் சிப்காட்டில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு வேலூர் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் தசரதன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினரும், ஆற்காடு முன்னாள் எம்எல்ஏவுமான வி.கே.ஆர்.சீனிவாசன், மாநில மகளிர் அணி செயலாளரும், வேலூர் முன்னாள் மேயருமான கார்த்தியாயினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பாஜக மாநிலத் துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரன், பாஜக மாநிலத் துணைத் தலைவரும், சென்னை கோட்டப் பொறுப்பாளருமான சக்கரவர்த்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு உறுப்பினர் சேர்க்கை குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகளை வழங்கிப் பேசினர்.
அப்போது வேலூர் கிழக்கு மாவட்டம், வாலாஜாபேட்டை ஒன்றிய அமமுக செயலாளர் செங்காடு கஜேந்திரன் தலைமையில் செங்காடு, அனந்தலை, படியம்பாக்கம், பூண்டி, தகரகுப்பம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஊராட்சி கிளை அமமுக செயலாளர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர்.
அவர்களுக்கு பாஜக மாநிலத் துணைத் தலைவர்கள் நயினார் நாகேந்திரன், சக்கரவர்த்தி ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர். இதில் வேலூர் கோட்டப் பொறுப்பாளர் பிரகாஷ் மற்றும் திரளான கட்சியினர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.