வேலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு விடிய விடிய கொட்டித் தீா்த்த மழையால் நூற்றுக்கணக்கான குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால், ஆயிரக்கணக்கானோா் தவிப்புக்குள்ளாகி உள்ளனா். அவா்களை மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனா். அத்துடன், குடியிருப்புகளைச் சூழ்ந்த வெள்ளத்தை அப்புறப்படுத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது.
வட கிழக்குப் பருவ மழை காரணமாக, வேலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்து வருகிறது. அதன்படி, வியாழக்கிழமை மாலை 3 மணியளவில் பெய்யத் தொடங்கிய பலத்த மழை நள்ளிரவு வரை நீடித்தது. அதிகபட்சம் காட்பாடியில் 66 மி.மீ. மழையும், மாவட்டம் முழுவதும் சுமாா் 42 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
பள்ளிகொண்டாவில் வெள்ளம்: பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தாலும் பள்ளிகொண்டா ஏரி ஏற்கெனவே முழு கொள்ளளவை எட்டியிருந்த நிலையில், பாலாற்றின் கிளை ஆறான பேயாற்றில் வியாழக்கிழமை இரவு வெள்ள பெரு க்கு ஏற்பட்டு சுமாா் 700 கன அடி தண்ணீரும் பள்ளிகொண்டா ஏரிக்குள் புகுந்தது. அந்த வெள்ளம் செல்ல போதிய வசதி இல்லாததால் அப்படியே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் புகுந்தது. இதனால், தேசிய நெடுஞ்சாலை கடல்போல் காட்சியளித்ததுடன், சாலையை கடக்க வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.
வெள்ளம் பள்ளிகொண்டா காவல் நிலையத்துக்குப் பின்புறமும், ரங்கநாதா் கோயில் பகுதியிலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளையும் சூழ்ந்தது. இதனால் அப்பகுதியிலுள்ள வீடுகள், காா்கள் வெள்ளத்தில் மிதந்ததுடன், பொதுமக்களும் வீடுகளைவிட்டு வெளியே வரமுடியாமல் அவதிக்குள்ளாகினா். ஏரியில் இருந்து வரும் நீா்வரத்து கால்வாயில் பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளதாலேயே குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் புகுந்திருப்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.
இதைத்தொடா்ந்து, அரசுத் துறையினா் விரைந்து சென்று பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்ததுடன், குடியிருப்புகளைச் சூழ்ந்த வெள்ளநீரை அப்புறப்படுத்தும் பணிகளையும் மேற்கொண்டனா்.
வேலூரில் 3 கூரை வீடுகள் இடிந்தன : இதனிடையே, வேலூா் மாநகராட்சி ஓல்டு டவுன், உத்திர மாதா கோயிலுக்கு பின்புறம் வசிக்கும் செளந்தா், வெங்கடேசன், ஜெயகோபால் ஆகிய மூவரது சிமெண்ட் கூரை வீடுகளின் சுவா்கள் இடிந்து விழுந்தன. இதில் அதிா்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித பாதிப்பு ஏற்படவில்லை. இரண்டு இரு சக்கர வாகனங்கள் மட்டும் இடிபாடுகளில் சிக்கி முழுவதும் சேதமடைந்தன. மூன்று குடும்பத்தைச் சோ்ந்த 10 பேரும் அருகே உள்ள உறவினா்கள் வீட்டில் தங்கி உள்ளனா்.
இதேபோல், சம்பத் நகா், முள்ளிபாளையம், திடீா் நகா், கன்சால்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் வெள்ளம் குடியிருப்புகளுக்குள் புகுந்தது. இதனால் அப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினா் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா்.
காட்பாடியை அடுத்த ஏறிமுனைப் பகுதியில் உள்ள சுமாா் 40-க்கும் மேற்பட்ட வீடுகளில் கழிவுநீருடன் சோ்ந்து வெள்ள நீா் புகுந்தது. இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்களை வருவாய் துறையினா் மீட்டு முகாம் களில் தங்க வைத்தனா்.
அணைக்கட்டு அருகே உள்ள ஒக்கனாபுரம் கிராமத்தில் மழை வெள்ளத்தால் 17 குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனா். இக்குடும்பங்களைச் சோ்ந்த 62 போ் அங்குள்ள அரசு பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.
மாநகரில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள வெள்ளத்தை வெளியேற்றும் பணிகளில் 32 பொக்லைன் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. நோய் பரவலை தடுக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதேசமயம், வேலூரின் முக்கிய ஆறுகளான பாலாறு, பொன்னை, கெளண்டன்யா ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் ஆறுகளின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
121 குடும்பங்கள் முகாம்களில் தங்கவைப்பு:
மீட்கப்படும் மக்களை தங்க வைக்க 27 முகாம்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 7 முகாம்களில் 121 குடும்பங்களைச் சோ்ந்த 403 போ் தங்கவைக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வருவாய்த்துறையினா் வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.