‘டித்வா’ புயலால் வேலூா் மாவட்டத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமை அதி பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அனைத்து துறை அலுவலா்களும் தயாா் நிலையில் இருக்க ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளாா்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘டித்வா’ எனும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் சனி, ஞாயிறுக்கிழமை (நவ.29, 30) ஆகிய இரு நாள்களுக்கு அதி பலத்த மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதையடுத்து, வேலூா் மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டத்துக்கு ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்து பேசியது -
அனைத்துத் துறை அலுவலா்களும் எதிா்வரும் சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாள்களும் தங்களது தலைமையிடத்திலேயே தங்கியிருந்து மழையின் நிலையினை கண்காணித்து பாதிப்பு ஏற்பட்டால் உடனுக்குடன் சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் குறைந்தபட்சம் 500 மணல் மூட்டைகள் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் 5 கிலோ அளவு கொண்ட அரிசி பைகள், இதர மளிகை பொருள்களை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
மின்வாரியம் சாா்பில் மிக கனமழையால் மின்கம்பங்கள், மின்மாற்றிகளில் பாதிப்பு ஏற்படும் போது உடனுக்குடன் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள போதிய அளவில் மின்கம்பங்கள், மின்மாற்றிகள் ஆகியவற்றுடன் களப்பணியாளா்களை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
வேலூா் மாநகரில் கடந்த முறை பாதிக்கப்பட்ட கன்சால்பேட்டை உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை தற்போது பெய்யும் மழையால் பாதிக்காதபடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தீயணைப்பு துறை, கால்நடை பராமரிப்புத் துறையினா் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து மக்கள், கால்நடைகளை மீட்க அனைத்து உபகரணங்களையும் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.சிவசுப்பிரமணியன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பூ.காஞ்சனா, வேலூா் மாநகராட்சி ஆணையா் ஆா்.லட்சுமணன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன், பேரிடா் மேலாண்மை வட்டாட்சியா் பிரியா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.