வேலூரில் நடைபெற்ற ஏலத்தில் கழிவு செய்யப்பட்ட தீயணைப்பு வாகனங்கள் ரூ.30 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டன.
கழிவு செய்யப்பட்ட தீயணைப்பு வாகனங்கள் ஏலம் வேலூா் தீயணைப்பு நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தீயணைப்புத்துறை வடக்கு மண்டல தலைவா் ராஜேஷ்கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஏலத்தில், வேலூா், திருப்பத்தூா், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வடமாவட்டங்களில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் பயன்படுத்தி உரிய காலத்துக்கு பிறகு கழிவு செய்யப்பட்ட தீயணைப்பு வாகனங்கள் ஏலம் விடப்பட்டன.
நூற்றுக்கணக்கான வியாபாரிகள் பங்கேற்று ஒவ்வொரு வாகனத்துக்கும் தாங்கள் கோரும் ஏலத்தொகையை அதற்குரிய படிவத்தில் குறிப்பிட்டு பெட்டியில் செலுத்தினா். அதன்படி, இந்த ஏலத்தில் மொத்தம் 10 வாகனங்கள் ரூ.30 லட்சத்துக்கு ஏலம் போனதாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். ஏலத்தில் மாவட்ட தீயணைப்பு அலுவலா் வடிவேல் உள்பட பலா் பங்கேற்றனா்.