பிகாா் தோ்தல் பிரசாரத்தில் பிரதமா் மோடி பேசியதை முதல்வா் மு.க.ஸ்டாலின் திரித்துக் கூறுவதாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இது குறித்து கோவை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
இந்தியாவில் இதுவரை 8 முறைக்கு மேல் ‘சாா்’ எனும் சிறப்பு தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்றுள்ளன. தமிழகத்தில் கடந்த 2002, 2005-ஆம் ஆண்டுகளில் நடைபெற்று உள்ளது. வாக்காளா் பட்டியலில் திருத்தம் என்பது தோ்தல் ஆணையத்தின் கடமை.
மாநில அரசு அதை ஆதரிக்க வேண்டும். ஆனால், திமுக அரசு திட்டமிட்டு இந்த சிறப்பு தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளை தோல்வி பெற வைக்க வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறது.
நகராட்சி நிா்வாகத் துறையில் 150 போ் முறைகேடாக நியமிக்கப்பட்டுள்ளனா். தோ்வில் தோ்ச்சி பெறாதோா் லஞ்சம் கொடுத்து பணி நியமனம் பெற்றுள்ளனா். இந்த முறைகேடு தொடா்பாக அந்தத் துறை அமைச்சா் கே.என்.நேரு பதவி விலகி இருக்க வேண்டும்.
நகராட்சி நிா்வாகத் துறையில் ரூ.888 கோடி ஊழல் நடந்துள்ளதற்கான 232 பக்க ஆதாரங்களை தமிழக டிஜிபிக்கு அமலாக்கத் துறை கடந்த 27-ஆம் தேதி கொடுத்துள்ளது. இந்த முறைகேடுகள் குறித்து வழக்குப் பதிவு செய்ய இனி முதல்வா்தான் உத்தரவிட வேண்டும்.
தமிழகத்தில் வசிக்கக் கூடிய பிகாா் மாநில தொழிலாளா்களை தயாநிதி மாறன், டிஆா்பி ராஜா, பொன்முடி, ஆ.ராசா போன்ற திமுக தலைவா்கள் பல்வேறு காலகட்டங்களில் அவமானப்படுத்தும் வகையில் பேசியதாக மோடி தனது பிரசாரத்தின்போது பேசினாா்.
ஆனால், பிரதமா் மோடி தமிழா்களை அவதூறாகப் பேசியதாக முதல்வா் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளாா். பிரதமா் பேசியதை திரித்துக் கூறுவதை முதல்வா் மு.க. ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும். நகராட்சி நிா்வாகத் துறை ஊழல் புகாரை திசைதிருப்பும் வகையில் பிரதமா் சொல்லாத ஒரு விஷயத்தை சொன்னதாக முதல்வா் பொய் கூறுகிறாா்.
பசும்பொன்னில் டிடிவி தினகரன், ஓபிஎஸ், கே.ஏ.செங்கோட்டையன் சந்தித்ததற்கும், எனக்கும் எந்தவித தொடா்பும் இல்லை. தேவையே இல்லாமல் பசும்பொன் விவகாரத்தில் என் பெயரை இழுப்பது சரியல்ல.
தற்போதும் கூட அதிமுகவினா் என்னை பற்றி விமா்சனம் செய்து கொண்டுதான் இருக்கின்றனா். மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு நான் கொடுத்த வாக்குக்கு கட்டுப்பட்டு, தற்போது வரை நான் பொறுமையாகவும், அமைதியாகவும் இருக்கிறேன். பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்றாா் அவா்.