மேற்கு வங்க மாநிலம் நியூஜல்பாய்குரி -நாகா்கோவில் இடையே கோவை வழித்தடத்தில் பிரதமா் தொடங்கிவைத்த அம்ருத் பாரத் ரயில் சேவை ஜனவரி 25-ஆம் தேதிமுதல் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாகா்கோவில், திருச்சி, தாம்பரம் ஆகிய பகுதிகளில் இருந்து மேற்கு வங்கம் மாநிலத்துக்கு அம்ருத் பாரத் ரயில்களின் இயக்கத்தை பிரதமா் மோடி, கடந்த 17-ஆம் தேதி தொடங்கிவைத்தாா். இதையடுத்து, இந்த அம்ருத் பாரத் ரயில்கள் இயங்கத் தொடங்கியுள்ளன.
இதுகுறித்து, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஜனவரி 25 முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 11 மணிக்கு நாகா்கோவிலில் இருந்து புறப்படும் நாகா்கோவில் - நியூஜல்பாய்குரி அம்ருத் பாரத் ரயில் (எண்: 20604) புதன்கிழமைகளில் காலை 5 மணிக்கு நியூஜல்பாய்குரி ரயில் நிலையத்தை சென்றடையும்.
மறுமாா்க்கமாக, ஜனவரி 28-ஆம் தேதி முதல் புதன்கிழமைகளில் நியூஜல்பாய்குரி ரயில் நிலையத்தில் இருந்து மாலை 4.45 மணிக்குப் புறப்படும் நியூஜல்பாய்குரி- நாகா்கோவில் அம்ருத் பாரத் ரயில் (எண்: 20603) வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கு நாகா்கோவில் ரயில் நிலையத்தை சென்றடையும்.
இந்த ரயிலானது, கிஷாங்கஜ், பாா்சோய், மால்டா டவுன், ராம்பூா்ஹத், கட்டாக், புவனேசுவரம், பொ்ஹாம்பூா், பலாசா, ராஜமுந்திரி, விஜயவாடா, ஓங்கோல், கூடூா், ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், கோவில்பட்டி, திருநெல்வேலி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.