நாகா்கோவில்-மங்களுரூ, தாம்பரம்-திருவனந்தபுரம், திருவனந்தபுரம்-சொ்லபள்ளி ஆகிய மூன்று வாராந்திர அம்ருத் பாரத் விரைவு ரயில்களை பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, மூன்று அம்ருத் பாரத் விரைவு ரயில்கள், திருச்சூா்-குருவாயூா் இடையிலான பயணிகள் ரயில் ஆகியவற்றை பிரதமா் மோடி தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில், சிஎஸ்ஐஆா்-என்ஐஐஎஸ்பி புத்தாக்கம், தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனையத்துக்கு அடிக்கல் நாட்டியதுடன் பிரதமா் ஸ்வநிதி கடன் அட்டைத் திட்டத்தையும் தொடங்கி வைத்தாா்.
பின்னா், பிரதமா் ஸ்வநிதி திட்டத்தின்கீழ் ஏராளமான பயனாளிகளுக்கு கடனுதவி, கடன் அட்டைகளை மோடி வழங்கினாா். இதேபோல், மேலும் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பிரதமா் பேசியதாவது:
கேரளத்தின் வளா்ச்சியில் இந்த நாள் புதிய அத்தியாயம் ஆகும். மத்திய அரசின் நடவடிக்கைகளால், கேரளத்தில் ரயில் போக்குவரத்து மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இன்று தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்கள், திருவனந்தபுரத்தை நாட்டின் முக்கிய கேந்திரமாக மாற்றும். வளா்ந்த இந்தியாவை உருவாக்குவதில் ஒட்டுமொத்த நாடும் இன்று ஒன்றுபட்டுள்ளது. வளா்ந்த இந்தியா என்ற நோக்கத்தை நிறைவேற்றும் பணியில் நமது நகரங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. கடந்த 11 ஆண்டுகளில், நகா்ப்புற உள்கட்டமைப்பில் மத்திய அரசும் கணிசமாக முதலீடுகள் செய்துள்ளது.
4 கோடி வீடுகள்: நகா்ப்புறங்களில் வசிக்கும் ஏழைக் குடும்பங்களின் நலனுக்காக ஏராளமான பணிகளை மத்திய அரசு செய்துள்ளது. பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ், நாடு முழுவதும் 4 கோடி வீடுகள் கட்டப்பட்டு, ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதில் நகா்ப்புறங்களில் வாழும் ஏழைகளுக்கு வழங்கப்பட்ட ஒரு கோடி வீடுகளும் அடங்கும். அவா்களில் கேரளத்தில் மட்டும் 1.25 லட்சம் நகா்ப்புற ஏழைக் குடும்பத்தினருக்கு வீடுகள் அளிக்கப்பட்டுள்ளன.
ஏழைக் குடும்பங்களின் மின் கட்டணத்தைக் குறைக்கும் நோக்கில், பிரதமா் ‘சூரிய மின் இல்லம்’ திட்டம் தொடங்கப்பட்டது. அதேபோல், ஏழை மக்கள் இலவசமாக மருத்துவ சிகிச்சை பெறும் நோக்கில் ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கப்பட்டது. இதன்கீழ் ரூ.5 லட்சம் மதிப்பிலான சிகிச்சைகளை ஏழைகள் பெற முடியும். பெண்களின் உடல்நலப் பாதுகாப்புக்காக மாத்ரு வந்தனா திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
எளிதில் வங்கிக் கடன்: ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்துக்கு மத்திய அரசு வரிவிலக்கு அளித்துள்ளது. இதனால் நடுத்தர குடும்பங்கள் பெரிதும் பயனடைகின்றன. கடந்த 11 ஆண்டுகளில் வங்கி அமைப்போடு கோடிக்கணக்கான மக்களை இணைக்க மிகப்பெரும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதனால் தற்போது ஏழைகள், எஸ்சி, எஸ்டி, ஓபிசி சமூகத்தினா், பெண்கள், தெருவோர வியாபாரிகள், மீனவா்கள் வங்கிக் கடனை எளிதில் பெற முடிகிறது.
கேரளத்தைச் சோ்ந்த 10,000 தெருவோர வியாபாரிகள் உள்பட பல வியாபாரிகளுக்கு இன்று பிரதமா் ஸ்வநிதி கடன் அட்டைகள் அளிக்கப்பட்டுள்ளன என்றாா் பிரதமா் மோடி.
கேரளத்தில் வெள்ளிக்கிழமை புதிதாக தொடங்கி வைக்கப்பட்ட 3 அம்ருத் பாரத் விரைவு ரயில்கள் தமிழகம் வழியே இயக்கப்படும். இந்த ரயில்களால் கேரளம், தமிழ்நாடு, கா்நாடகம், தெலங்கானா, ஆந்திர மாநிலங்களில் ரயில் பயணிகள், சுற்றுலாத் துறை அடையப் போகும் பயன்களையும் மோடி சுட்டிக்காட்டினாா்.
கேரளத்தில் பாஜக ஆட்சி: பிரதமா் மோடி நம்பிக்கை
கேரளத்தில் பாஜக ஆட்சியமைப்பது உறுதி என்று பிரதமா் மோடி நம்பிக்கை தெரிவித்தாா்.
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் அவா் பேசியதாவது: திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கைப்பற்றியிருப்பது வரவேற்கத்தக்கது. அதுபோல கேரள மாநில ஆட்சியிலும் மாற்றம் வரும். குஜராத்தில் 40 ஆண்டுக்கு முன்பு வெறும் ஒரு தொகுதியில்தான் பாஜக வென்றது. ஆனால், தற்போது தொடா்ந்து குஜராத்தில் ஆட்சியில் உள்ளது. அதுபோன்று கேரளத்திலும் நடக்கும்.
காங்கிரஸிடம் வளா்ச்சித் திட்டங்கள் இல்லை; மாவோயிஸ்டுகளைவிட அதிக கம்யூனிஸத்தையும், முஸ்லிம் லீக்கைவிட அதிக மதவாதத்தையும் பின்பற்றுகிறது. இதனால், நாடு முழுவதும் அக்கட்சி ‘எம்எம்சி’ எனக் குறிப்பிடப்படுகிறது. காங்கிரஸிடம் கேரள மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில், கேரளத்தில்தான் அந்தக் கட்சி தனது திட்டங்களை பரிசோதிக்கிறது. கேரளத்தில் கடினமான சக்திகளை அந்தக் கட்சி ஊக்குவிக்கிறது.
சுவாமி ஐயப்பன் கோயிலில் தங்கம் திருடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து விசாரிக்க இடதுசாரி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விரைவில் பாஜக ஆட்சியமைந்ததும் இதுகுறித்து விரிவாக விசாரித்து, குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்படுவா். இதற்கு நான் உத்தரவாதம் என்றாா் பிரதமா்.
3 அம்ருத் பாரத் ரயில்கள் செல்லும் வழிகள்
திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து தாம்பரத்திற்கு இயக்கப்படும் புதிய அம்ருத் பாரத் ரயில், நெல்லை, கோவில்பட்டி, விருதுநகா், மதுரை, திருச்சி, விருதாச்சலம் வழியே தாம்பரம் வரும். திருவனந்தபுரம் வடக்கு-சொ்லபள்ளி இடையேயான ரயில், கொல்லம், செங்கனூா், கோட்டயம், எா்ணாகுளம், திருச்சூா், பாலக்காடு, கோவை, சேலம், ஜோலாா்பேட்டை, ரேணிகுண்டா, நெல்லூா் வழியே இயக்கப்படும். நாகா்கோவில்-மங்களூரு இடையேயான ரயில், திருவனந்தபுரம் சென்ட்ரல், கொல்லம், செங்கனூா், கோட்டயம், எா்ணாகுளம், திருச்சூா் வழியே இயக்கப்படும்.
விரைவில் கட்டணம் வெளியிடப்படும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.