முகப்பு
கோயம்புத்தூர்

கோவையில் மாயமான வருமான வரி அதிகாரி பர்கூரில் மீட்பு

கோவையில் மாயமான வருமான வரித் துறை துணை ஆணையர் எஸ்.சிவகுமார் பர்கூரில் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

கோவையில் மாயமான வருமான வரித் துறை துணை ஆணையர் எஸ்.சிவகுமார் பர்கூரில் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டார்.
கோவை, பீளமேடு கௌதமபுரி நகரில் வசித்து வருபவர் எஸ்.சிவகுமார். இவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனர். இவர், கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள வருமான வரித் துறை அலுவலகத்தில் துணை ஆணையராகப் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், அக்டோபர் 13-ஆம் தேதி அதிகாலை 1 மணி அளவில் வீட்டில் இருந்து வெளியே சென்ற சிவகுமார் அதன்பின் வீடு திரும்பவில்லை. அவரது செல்லிடப்பேசி, ஏடிஎம் அட்டை உள்ளிட்டவற்றை அவர் வீட்டிலேயே விட்டுச் சென்றது தெரியவந்தது.  
இதுகுறித்து, அவரது தம்பி ராம்குமார் அளித்த புகாரின் பேரில் பீளமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிவகுமாரைத் தேடிவந்தனர். இதனிடையே, காணாமல் போன சிவகுமார் வருமான வரித் துறையில் உயர் பதவி வகித்து வருவதால் அவரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் மாநகர போலீஸார் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
மேலும், மாநகரக் காவல் ஆணையர் அ.அமல்ராஜ் உத்தரவின்படி நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டைத் தீவிரப்படுத்தப்பட்டது. தமிழகத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலாத் தலங்களிலும் 18 நாள்களாக அவரைத் தேடிவந்துள்ளனர்.
இந்நிலையில்,  கிருஷ்ணகிரியில் இருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பர்கூரை அடுத்த அச்சமங்கலம் அருகே, ஊர்காவல் படையைச் சேர்ந்த ஒருவர் சிவகுமாரை செவ்வாய்க்கிழமை இரவு பார்த்துள்ளார். அப்போது, அவரிடம் சிவகுமார், மன அமைதியைத் தேடி வெளியேறியதாகவும், தான் சோர்வான நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
 இதுகுறித்து, ஊர்க்காவல் படையைச் சேர்ந்த அந்த நபர் அளித்த தகவலின்பேரில் பர்கூர் காவல் துறையினர் சிவகுமாரை மீட்டு கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து, அவரது தந்தை செண்பகராமன், தம்பி ராம்குமார் ஆகியோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில், பர்கூர் சென்ற சிவகுமார் குடும்பத்தினர் அவரை சென்னையில் உள்ள வீட்டுக்கு புதன்கிழமை அழைத்துச் சென்றதாக பீளமேடு போலீஸார் தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →